நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சந்தித்த எதிர்பாராத தோல்வி, அக்கட்சியின் உட்கட்டமைப்பில் இருந்த பலவீனங்களை அம்பலப்படுத்தியுள்ளது.
தோல்விக்கான காரணங்களை ஆராய அமைக்கப்பட்ட கள ஆய்வுக்குழு, தனது அறிக்கையை திமுக தலைவரான மு.க. ஸ்டாலினிடம் தாக்கல் செய்துள்ளது.
இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் அறிவாலய வட்டாரத்தில் கசிந்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில் திமுகவின் தேர்தல் தோல்விக்கு குறிப்பிடப்பட்டுள்ள மிக முக்கியமான 6 காரணங்கள் இங்கே…
மகளிர் உரிமைத் தொகை ஏமாற்றம்
திமுக அரசுக்கு மிகப்பெரிய வாக்கு வங்கியாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டமே, இந்தத் தேர்தலில் அதற்குப் பின்னடைவாக மாறியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. தேர்தல் அறிக்கையில் “அனைத்துத் தகுதியுள்ள பெண்களுக்கும்” உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறிவிட்டு, பின்னர் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான பெண்களுக்கு இந்தத் தொகை கிடைக்காமல் போனது. இதனால், தங்களுக்குத் தொகை கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் இருந்த பெண்கள், ஒட்டுமொத்தமாக திமுக அரசுக்கு எதிராகத் தங்களின் வாக்குச் சீட்டைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது இந்த அறிக்கையின் மூலம் உறுதியாகியுள்ளது.
விஜய் செல்வாக்கு குறித்து உதாசீனம்
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்க்கு இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே இருந்த அசுரத்தனமான செல்வாக்கை திமுகவின் மாவட்டச் செயலாளர்களும், மூத்த நிர்வாகிகளும் முற்றிலும் குறைத்து மதிப்பிட்டுள்ளனர். கள நிலவரத்தை உணர்ந்த அடிமட்டத் தொண்டர்கள், “விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு சாதாரணமானது அல்ல, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று தலைமைக்கும் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கும் முன்கூட்டியே எடுத்துக்கூறியுள்ளனர். ஆனால், அகம்பாவத்தில் இருந்த மாவட்டப் புள்ளிகள் அதை சற்றும் கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தியதே திமுகவின் கோட்டைகள் சரிவதற்குக் காரணமானது என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
உள்கட்சி அதிருப்தி
திமுக ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்தும், கிராமப்புறப் பொருளாதாரத்தையும் உள்ளூர் அரசியலையும் தீர்மானிக்கும் கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களையும், ஆவின் சங்கத் தேர்தல்களையும் நடத்தத் தவறிவிட்டது. இத்தேர்தல்கள் நடத்தப்பட்டிருந்தால் பல்லாயிரக்கணக்கான திமுகவினர் உள்ளூர் அளவில் பதவிகளைப் பெற்று பலனடைந்திருப்பார்கள். ஆனால், தேர்தல்கள் தள்ளிப்போடப்பட்டதால், ஐந்து வருடங்களாக உழைத்தும் தங்களுக்கு எந்த அங்கீகாரமும் பதவியும் கிடைக்கவில்லை என்ற கடுமையான அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் தேர்தலின்போது சுணக்கம் காட்டியுள்ளனர்.
நிஜத் தொண்டர்கள் புறக்கணிப்பு
திமுகவின் வெற்றிக்குக் காலம் காலமாக உழைத்த உண்மையான, பாரம்பரியமிக்க உடன்பிறப்புகள் கோவில் அறங்காவலர் குழு நியமனங்களில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். கட்சிக்கு எந்தச் சம்மந்தமும் இல்லாத நபர்களும், பண பலம் படைத்தவர்களும், அதிகார மையங்களுக்கு நெருக்கமானவர்களும் மட்டுமே அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டனர். இது, “நமக்கான ஆட்சியில் நமக்கு மதிப்பில்லை” என்ற எண்ணத்தை உண்மையான தொண்டர்கள் மத்தியில் விதைத்து, அவர்களைத் தேர்தல் வேலையில் இருந்து பின்வாங்கச் செய்துள்ளது.
நெருக்கடியான நிலை
இக்கள ஆய்வு அறிக்கையின் பின்னணியில் தற்போதைய அரசியல் சூழலை உற்றுநோக்கினால், திமுகவின் எதிர்காலம் பெரும் சவாலுக்குள்ளாகியுள்ளது தெளிவாகிறது. விசிக, காங்கிரஸ் போன்ற பெரிய கூட்டணிக் கட்சிகள் தவெக அமைச்சரவையில் பங்கு பெற்றுவிட்ட சூழலில், நீண்டகாலத் தோழமைகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தற்போது திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிலைபாடும் ஏறக்குறைய இதுவானதாகவெ இருக்கும். தேசிய அளவில் ‘இந்தியா’ (INDIA) கூட்டணியில் இருந்தும் திமுக தள்ளி நிற்கும் நிலையில், உள்கட்சி அதிருப்தியோடு சேர்த்து வெளிக்கூட்டணிப் பலத்தையும் திமுக இழந்து நிற்கிறது.
இந்த நிலையில், இந்தக் கள ஆய்வு அறிக்கை வெறும் தோல்விக்கான காரணங்கள் மட்டுமல்ல, திமுகவிற்கான அபாய எச்சரிக்கை மணி என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள். பண பலம் மற்றும் அதிகார பலத்தை மட்டுமே நம்பியிருந்த மாவட்டச் செயலாளர்களின் அலட்சியமே தவெகவின் அசுர வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது என்பதை அறிக்கை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.
இனிவரும் காலங்களில், மு.க.ஸ்டாலின் இந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்டப் பொறுப்பாளர்கள் மீது எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப்போகிறார், ஏமாற்றமடைந்த பெண்களையும் புறக்கணிக்கப்பட்ட தொண்டர்களையும் எப்படிச் சமாதானப்படுத்தப்போகிறார் என்பதைப் பொறுத்தே திமுகவின் அரசியல் எதிர்காலம் அமையும்.
