டெல்லி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, நாட்டின் முதல் ‘ஈ-85’ எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தை டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு இந்திய எரிசக்தி துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. ஈ-85 என்பது பெட்ரோலுடன் 85 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட புதிய எரிபொருள் ஆகும். இதன் விலை லிட்டருக்கு வெறும் 82 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது டெல்லியில் சாதாரண பெட்ரோல் லிட்டருக்கு 102.12 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், ஈ-85 சுமார் 20 ரூபாய் குறைவான விலையில் கிடைப்பது வாகன உரிமையாளர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்திய எத்தனால் கலப்புத் திட்டத்தின் கீழ் தற்போது பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்படுகிறது. இந்த எத்தனால் முக்கியமாக கரும்பு பாகு கழிவு, சோளம், அரிசி மற்றும் சேதமடைந்த தானியங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

அரசின் இலக்கு எத்தனால் கலப்பை படிப்படியாக 85 சதவீதம் வரை உயர்த்துவதாகும். இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாகக் குறைத்து, அந்நிய செலாவணியை மிச்சப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உயர் எத்தனால் கலப்பு எரிபொருள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை பெருமளவு குறைக்கும் திறன் வாய்ந்தது. கார்பன் உமிழ்வு கணிசமாகக் குறையும் என்பதால், பசுமை இந்தியா இலக்கை நோக்கிய முக்கிய அடியாக இது கருதப்படுகிறது. விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில், உள்நாட்டு எத்தனால் உற்பத்தியை ஊக்குவிப்பதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆட்டோமொபைல் துறையும் இந்த மாற்றத்துக்கு ஏற்ப தயாராகி வருகிறது. ஹீரோ மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஏற்கனவே ஈ-85 எரிபொருளில் இயங்கும் பைக்களை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. மாருதி சுசூகி நிறுவனம் விரைவில் ஈ-85க்கு ஏற்ற ‘வேகன் ஆர்’ மாடல் காரை அறிமுகப்படுத்த உள்ளது. பிற நிறுவனங்களும் இதுபோன்ற வாகனங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. டெல்லியின் பூசா சாலை, பழைய ராஜிந்தர் நகர் அருகே உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் முதல் ஈ-85 விற்பனை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் இத்தகைய இயந்திரங்களை படிப்படியாக நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தால், எரிபொருள் செலவு குறைவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயிகளின் வருமான உயர்வு உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இந்தியாவின் எரிசக்தி சுயநம்பிக்கையை வலுப்படுத்தும் இந்த முயற்சி, நீடித்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version