அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பின் முக்கிய நகர்வாக இருதரப்பு ‘தலை’களுக்கு இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை சமீபத்தில் நடந்தது. அச்சந்திப்பிற்கு பின்னதாக நடந்த இரண்டு முக்கியமான நகர்வுகளையும் அதன் பின்னணியில் உள்ள அதிமுகவின் மாஸ்டர் பிளானையும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தொகுதிப்பங்கீட்டு தகவலை கசியவிட்டது யார்?
இதில் முதலாவதாக பார்த்தால், அதிமுக தலைமையும், பாஜக தரப்பு முக்கியப்புள்ளிகளும் கடந்த டிசம்பர் 23 அன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் போதே கிட்டத்தட்ட தொகுதி பங்கீடுகள் தொடர்பான பட்டியல் ஒன்று வெளியாகி அன்று முழுவதும் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக ஓடியது. அதிமுகவிற்கு 170 இடங்கள், பாஜகவிற்கு 23 இடங்கள் மீதமுள்ளவற்றில் மற்றவர்களுக்கு ஒதுக்குவது என ஒரு பட்டியல் வெளியானது. இந்த தொகுதிப்பங்கீடுகள் குறித்து நேரடியாக கேட்டுவிடலாம் என செய்தியாளர்கள் முயன்றும் அதற்கு எடப்பாடி பழனிசாமியோ, பியூஸ் கோயலோ பிடி கொடுக்கவில்லை. பிறகு அப்பட்டியலில் உள்ள இதர கட்சி தலைவர்கள் அது வதந்தி என பதிலளித்து பேசிவிட்டனர். இந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் நடுவே நின்ற ஒரு முக்கிய கேள்வி, “யார் இப்படி ஒரு தகவலை கசியவிட்டது?” என்பது தான். அதற்கான பதில் அப்போது பெரிதாக தெரியவில்லை. இப்போது தெரியவந்துள்ளது. அப்படியான தகவலை கசியவிட்டது அதிமுக தானாம். அதற்கு என்ன காரணம் தெரியுமா?
நடக்கப்போகும் தேர்தலில் கூட்டணியில் பாஜக எதிர்பார்த்தது 117 சீட்டுகளாம். அதாவது மொத்தமுள்ள 234 தொகுதிகளில் சரிபாதி. கண்டிப்பாக இதற்கு அதிமுக ஒத்துக்கொள்ளாது என பாஜகவுக்கு தெரியும். இருந்தும் ஏன் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட இருந்தது என்றால், 117-ல் ஆரம்பித்து பின் 100-ல் தொடங்கி பேரத்தை 60-ல் முடிக்கலாம் என கணக்கு போட்டு வைத்திருந்ததாம் டெல்லி மேலிடம். இதை எப்படியோ முன்கூட்டியே தெரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, உள்ளுக்குள் தொகுதிப்பங்கீடு குறித்து பேசும்போதும் பிடி கொடுக்காமல், வெளியில் வந்தும் எதும் சொல்லாமல் இடையே இப்படி ஒரு காயை நகர்த்தியுள்ளார். மேற்சொன்ன உத்தேச பட்டியலை வேண்டுமென்றே கசியவிட்டதன் மூலம், “இவ்வளவு தான் உங்களுக்கு தர முடியும்” என பாஜகவுக்கு மெசேஜ் கொடுத்துள்ளார் இ.பி.எஸ். இத்தகைய திட்டத்தின் மூலம் டெல்லியையே ஓவர்டேக் செய்து, அவர்களை கொஞ்சம் டென்ஷன் ஆக்கியிருக்கிறார் எடப்பாடியார் என்கின்றனர் இ.பி.எஸ்-ன் நகர்வுகளை கண்காணிப்பவர்கள்.
கோவையில் கூட்டணிக்குள் சடுகுடு
இரண்டாவது தகவலை பொறுத்தவரை அது கூட்டணிக்குள் குண்டு வைப்பது போன்று நிகழ்ந்த ஒரு சம்பவம். அதாவது, பாஜக தாங்கள் பலம் வாய்ந்த தொகுதிகள் என பட்டியலிட்டுள்ள தொகுதிகள், எங்களுக்கானது என சொல்லாலும் செயலாலும் காட்டும் அதிமுகவின் ஆக்ஷன் தான் அது. இத்தகைய புகைச்சல் தொடங்கியிருப்பது கோவையில் தான். கொங்கு மண்டலத்தின் தலைமையான கோவையில் அதிமுக பலம் வாய்ந்தது. ‘கொங்கு மண்டலம் என்றாலே அது அதிமுகவின் கோட்டை’ என்பது தான் இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தல்கள் வாயிலாக நம்பப்படுகிற எழுதப்படாத விதி. அப்படி இருக்கையில், “கோவையில் நாங்களும் வளர்ந்துள்ளோம்” என கடந்த சட்டமன்ற தேர்தல் வெற்றியையும், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கொடுத்த வாக்கு வங்கியையும் வைத்து பாஜக ஒரு தொகுதி பட்டியலை போட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே வென்ற தொகுதியிலேயே நிற்கலாம் என வானதி நினைக்கும் கோவை தெற்கு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் கோவை மண்டலத்தில் வருகின்ற நீலகிரி போன்ற இடங்களை பெற்றுவிடலாம் என பாஜக கனவு கண்டிருக்க அதற்கு முதல் இடியை இறங்கியிருக்கிறார் கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ-வான அம்மன் K.அர்ச்சுனன். வானதி தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவுக்கான தொகை செலுத்திருப்பதன் மூலம் வானதிக்கு ‘ஷாக்’ கொடுத்துள்ளார் அவர்.
ஏற்கனவே, “கோவையிலுள்ள 10 தொகுதிகளில் 5 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்குங்க அண்ணா” என அதிமுக – பாஜக கூட்டணி உறுதியான கையோடு பாஜகவினர் கொக்கி போட, சிரித்துக்கொண்டே “வாய்ப்பில்லைங்கண்ணா” என கேட் போட்டிருக்கிறார் எஸ்.பி.வேலுமணி. இதையெல்லாம் தாண்டி எப்படியாது 3 தொகுதிகளையாவது பெற்றுவிட முட்டி மோதுகிறது பாஜக. ஆனால், “நான் எடுக்கும் முடிவு தான் இங்கு நடக்கும்” என்ற வகையில், எடப்பாடியாரின் சொல்படியே வானதி இருக்கும் தொகுதியில் விருப்ப மனு பெற்றுள்ளார் அம்மன் அர்ச்சுனன் என கூறும் எம்.ஜி.ஆர் மாளிகை பல்ஸ் அறிந்தோர், “கோவை மண்டலத்தில் நிச்சயம் பாஜகவை அதிமுக ஆட்டுவிக்கும்” என்கின்றனர். போதாக்குறைக்கு கோவை மண்டலத்தில் அண்ணாமலைக்கு பாஜக வாய்ப்பு வழங்கும் என கூறப்படும் நிலையில், அப்படி நடந்தால் அது தொகுதிப்பங்கீட்டில் கூடுதல் பிரளயமாக வெடிக்கும். அது கூட்டணியையே ஆட்டம் காணவும் செய்யலாம். இந்த தகவலின் படி, பாஜகவை தன் பிடிக்குள்ளேயே வைத்து, தான் சொல்லும் தொகுதியிலேயே பாஜக வேட்பாளர்களை நிற்க வைப்பார் என்கின்றது தகவல் பகிரும் குழு.
இப்படியாக, “கூட்டணிக்கு பின் நாம் நினைத்ததை முடித்துக்கொள்ளலாம்” என நினைக்கும் பாஜகவுக்கு, ஒவ்வொரு நிலையிலும் ‘செக்’ வைத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ‘கூட்டணி ஆட்சி’ என குரல் எழுப்பியவர்களிடம் ‘அதிமுக தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறும்’ என்ற வார்த்தைகளால் ‘நோ’ சொன்னது; ‘என்.டி.ஏ கூட்டணி’ என்ற சொல்லாடலால் பாஜக தன்னை முன்னிறுத்திக்கொள்ள முயலும்போது, ‘அதிமுக தலைமையிலான கூட்டணி’ என்ற வார்த்தைகளால் அதிமுகவின் இடத்தை விட்டுத்தராதது; ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் இணைப்பு திட்டத்தில் ‘கேட்’ போட்டது; தொகுதிப்பங்கீட்டில் சாமர்த்தியமாக காய் நகர்த்துவது என ஒவ்வொரு இடத்திலும் பழனிச்சாமியின் கையே ஓங்கியிருக்கிறது. இனி அடுத்து வரும் நகர்வுகளில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
“உங்க ஊர்ல நீங்க பெரிய ரவுடியா இருக்கலாம்… இங்க நாங்க தான்டி..!!”

