நாடு மட்டுமில்லாது உலகையே ஒரு மிரட்டு மிரட்டிய வைரஸ் என்றால் அது கொரோனா. கடந்த 2020 முதல் தொடங்கிய கொரோனா 3 வருடங்களாக உலகம் முழுவதும் லட்சக் கணக்கான உயிர்களை பலிவாங்கியது. அதற்கான தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்பட்டு, மீண்டும் இயல்புநிலை திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் கொரோனா வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.

ஆசியாவில் புதிய கொரோனா அலை உருவாக தொடங்கி இருப்பதாகவும், இந்தியாவில் மட்டும் இதுவரை 257 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஒமைக்ரான் பிஏ.2.86திரிபான ஜேஎன்1 வகை கரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மக்கள்தொகை நெருக்கம் அதிகமுள்ள ஹாங்காங், சிங்கப்பூர், சீனா தாய்லாந்து ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து முக்கிய பகுதிகளில் சுகாதாரத்துறை செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கொரோனா தொற்று பரவி வருகிறது. கர்நாடகாவில் மட்டும் இதுவரை மொத்தம் 35 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 32 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில், கர்நாடகா ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டு இருந்ததுடன், சுவாச கோளாறு பிரச்னையும் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 17-ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று (24.05.2025) வெளியானது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று(25.05.2025) முதல் கர்நாடகாவில் கொரோனா பரிசோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version