யூடியூபர் விஜே சித்து தனது அலுவலக மின் கட்டணம் ரூ.62,000 என்ற அளவுக்கு அதிகமாக வந்ததாக வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சியான திமுக இதை பெரிதாக்கி தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராக தீவிர விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.

ஜூலை மாத மின் கட்டணங்கள் வழக்கத்தை விட கணிசமாக உயர்ந்துள்ளதாக சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் சமூக வலைதளங்கள் மற்றும் நேரடியாக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் புகார் அளித்து வருகின்றனர். இந்தப் பிரச்சினை மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் முதல்வர் விஜய் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, மின் நுகர்வு கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை உடனடியாக ஆய்வு செய்ய தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக, கடந்த மே மாத கட்டணத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் நுகர்வு அளவில் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்பட்ட 3.70 லட்சம் மின் இணைப்புகள் மீது தீவிர மறு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுப் பணியில் தலைமைப் பொறியாளர்கள் 25 இணைப்புகள், மேற்பார்வைப் பொறியாளர்கள் 50, கோட்டப் பொறியாளர்கள் 75, துணை நிதிக் கட்டுப்பாட்டாளர்கள் 50, உதவி கோட்டப் பொறியாளர்கள் 100, வருவாய் புலனாய்வுப் பிரிவு கணக்கு அலுவலர்கள் 150, மூத்த மதிப்பீட்டு அலுவலர்கள் 150, வருவாய் பிரிவு உதவி கணக்கு அலுவலர்கள் 100, மதிப்பீட்டு அலுவலர்கள் 150 மற்றும் உதவிப் பொறியாளர்கள் 100 இணைப்புகளை முறையே ஆய்வு செய்ய உள்ளனர்.

ஆய்வின்போது தவறுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் வி. அருண் ராய் தெரிவித்துள்ளார். விஜே சித்து தனது வீடியோவில் அலுவலக ஸ்விட்சுகளை அணைத்த பிறகும் மின் கட்டணம் அதிகமாக வந்ததாகக் கூறியிருந்தார். இந்த வீடியோவை திமுக ஐடி விங் பகிர்ந்து, “3.70 லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு, தன் நிர்வாகத் திறமையின்மையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது தவெக அரசு. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் தலையில் அநியாயப் பொருளாதாரச் சுமையைச் சுமத்தியுள்ள இந்த மக்கள் விரோத அரசு இனியாவது திருந்தட்டும்” என விமர்சித்தது.

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து பதிவிட்டு, மின் வெட்டுப் பிரச்சினைக்குப் பிறகு இப்போது கட்டணப் பிரச்சினை எழுந்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், மின் கட்டணம் செலுத்தும் கால அவகாசத்தை நீட்டிக்கவும், எதிர்காலத்தில் ரீடிங் எடுப்பதில் சரியான முறையை உறுதி செய்யவும் வலியுறுத்தினார். இந்த சர்ச்சை தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version