தற்கொலை செய்து கொண்ட அதிமுக நிர்வாகியின் உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டாரத்தில் உள்ள திருப்பனந்தாள் பகுதியில் அதிமுகவின் தீவிர ஆதரவாளரும், வர்த்தக அணி பொறுப்பாளருமான மகேந்திரன் தீக்குளித்து உயிரிழந்த சோக சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உப்புக்காரத் தெருவைச் சேர்ந்த மகேந்திரன், அதிமுகவின் உறுதியான விசுவாசியாக அறியப்பட்டவர். கட்சியின் தோல்வி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட உட்கட்சி பிளவு ஆகியவை அவரது மனதைப் பெரிதும் பாதித்திருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை அவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு உணர்ச்சிகரமான பதிவை வெளியிட்டார். அதில், “அதிமுக ஒன்றிணைய வேண்டும். கட்சி தோற்றுப்போனது வேதனை அளிக்கிறது. அடுத்த பிறவியில் அதிமுகவின் எளிய தொண்டனாகப் பிறக்க வேண்டும். எனது உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி மலர் வளையம் வைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்தப் பதிவைப் பார்த்ததும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, அவரைத் தேடத் தொடங்கினர்.
இந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று மகேந்திரனின் உடலுக்கு மலர் வளையம் அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மகனை இழந்து கதறும் தாயின் கரங்களைப் பிடித்து ஆறுதல் கூறினார். குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்த அவர், மகேந்திரனின் தியாகத்தைப் பாராட்டி பேசினார். இச்சம்பவம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தோல்விக்குப் பிறகு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஒரு உணர்ச்சிவசப்பட்ட தொண்டர் தீவிர நடவடிக்கைக்கு துணிந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து முழு விசாரணை நடத்தி வருகின்றனர்.
