தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ், தனது அடுத்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘மஞ்சணத்தி’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் புதிய திரைப்படம் இதுவாகும். இதுவரை சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருடன் பணியாற்றிய மாரி செல்வராஜ், முதன்முறையாக இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்துள்ளார்.

‘மஞ்சணத்தி’ படத்தின் அறிவிப்பு போஸ்டர் மற்றும் சிறப்பு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இளையராஜாவின் ஆன்மீக மற்றும் எமோஷனல் பின்னணி இசையுடன் வெளியாகி இருக்கும் இந்த அறிவிப்பு வீடியோ, ரசிகர்களை மெய்மறக்கச் செய்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாரி செல்வராஜின் முந்தைய படமான ‘கர்ணன்’ திரைப்படத்தில் ‘மஞ்சணத்தி புராணம்’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோவில் இளையராஜாவின் ஸ்டூடியோவுக்குள் செல்லும் மாரி செல்வராஜ், ராஜாவை சந்திக்கும் காட்சிகள், ராஜா அமைக்கும் ட்யூன்களை மெய் மறந்து ரசிக்கும் காட்சிகள் எல்லாம் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் இசைஞானி காகிதத்தில், ‘மஞ்சணத்தி’ என்றும் எழுதியிருக்கிறார். அதுதான் படத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரி செல்வராஜ் இயக்கி, தயாரிக்கும் இத்திரைப்படத்தில் கதிர், பிரியங்கா மோகன், காயடு லோஹர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பிறகு கதிர் – மாரி செல்வராஜ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு எமோஷனல் டிராமாவாக உருவாகவிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, அடுத்த சில வாரங்களில் தொடங்கவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version