குதிரை பேரம் தொடர்பாக அதிமுக நீதிமன்றம் சென்றால் அதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் எரிசக்தி, மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் நீதித்துறை சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அமைச்சரின் அறையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், கடந்த கால அரசுகளில் நிலவிய ஊழல் மற்றும் பணம் கொடுத்து பதவி பெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தகுதி (மெரிட்) அடிப்படையிலான நியமனங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, எந்தவித பாகுபாடும் இன்றி நீதிபதிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார். “கடந்த காலங்களில் உயர் பதவிகளுக்கு பல கோடி ரூபாய் பணம் கொடுத்து நியமனங்கள் நடைபெற்றன. இது நீதித்துறையின் நம்பகத்தன்மையை பாதித்தது. ஆனால், முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த ஆட்சியில் லஞ்சம், லாவண்யம், முறைகேடுகள் ஆகியவை அறவே இல்லை. தகுதியுள்ளவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்,” என்று அமைச்சர் நிர்மல்குமார் வலியுறுத்தினார்.
சமீபத்தில் தற்காலிகமாக மெரிட் அடிப்படையில் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டதாகவும், பல முன்னாள் நீதிபதிகள் தன்னை தொடர்பு கொண்டு 40 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய நேர்மையான முறை அமல்படுத்தப்படுவதில் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இந்த நடவடிக்கை சாமானிய மக்கள் மற்றும் ஏழை எளியோருக்கு விரைவில் நீதி கிடைக்க உதவும் என்று நம்பிக்கை வெளியிட்டார். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான வழக்குகள் விரைவாக முடிவுக்கு கொண்டுவரப்படும். அரசு வழக்கறிஞர்கள் நீதிபதிகளுக்கு உறுதுணையாக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மாவட்ட அளவில் வழக்கறிஞர்கள் நியமனமும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி தகுதி அடிப்படையில் நடைபெறுவதாக அமைச்சர் தெரிவித்தார். ஒரு மாதத்திற்குள் அனைத்து நியமனங்களும் முடிக்கப்படும் என்றார். “பல அழுத்தங்கள் வந்தாலும் நேர்மையான பாதையில் இருந்து நாங்கள் தவற மாட்டோம். தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்,” என்று எச்சரித்தார்.
மேகதாது அணை விவகாரம்:
மேகதாது அணை கட்டுவதற்கு எந்த அனுமதியும் வழங்கப்படாது என்று திட்டவட்டமாக அறிவித்த அமைச்சர், இதற்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், முதலமைச்சர் விஜய் தலைமையில் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார். கர்நாடக அரசின் எந்த முயற்சியும் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானதாக இருக்கும் என்பதை அரசு உறுதியாக எதிர்கொள்ளும் என்றார்.
அதிமுக பிளவு குறித்து:
அதிமுகவினர் ஆளுநரை சந்தித்து குதிரை பேரம் நடத்தியதாக எழுந்த புகார்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அதிமுக பிளவுக்கு காரணம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலின் குடும்பங்கள் இணைந்து ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்ததே என்றார். “இந்த முயற்சி அதிமுக, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து வெளியே வந்தனர். இதில் எந்த பேரமும் இல்லை. பெரும்பான்மையை நிரூபித்து ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளோம்,” என்று விளக்கினார்.
தனது குடும்பத்தை மட்டும் காப்பாற்ற முயலும் கட்சியை தொண்டர்களும், எம்எல்ஏக்களும் எப்படி நம்ப முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், இது தனிப்பட்ட முடிவு என்றும், அதிமுக நீதிமன்றம் சென்றால் சட்டரீதியாக எதிர்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். மொத்தத்தில், இந்த ஆட்சியில் தகுதி, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் உறுதியளித்தார். இந்த அணுகுமுறை நீதித்துறையை வலுப்படுத்தி, மக்களுக்கு உடனடி நீதி வழங்க உதவும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
