சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் இன்று 2வது நாளாக நீடித்து வருகிறது.

தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில், மாநில அரசியல் களம் தினந்தோறும் புதிய அதிர்வுகளை சந்தித்து வருகிறது.

குறிப்பாக, அதிமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த இணைப்புகள் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவின் உள் அமைப்பு சீர்குலைந்து வரும் சூழலில், கட்சியின் அடித்தள நிர்வாகிகள் பலரும் ராஜினாமா செய்து தவெகவை நோக்கி நகர்வது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த இரு நாள் கூட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. முதல் நாள் கூட்டத்தில் செங்கல்பட்டு மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி விரிவான ஆலோசனை நடத்தினார். இன்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடன் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனையில் அதிமுகவின் எதிர்கால வளர்ச்சி உத்திகள், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள், கள நிலவரம், உறுப்பினர் பலப்படுத்தல் மற்றும் தவெகவின் வளர்ச்சியை எதிர்கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்படுகின்றன.அதிமுகவினர் இழப்பை ஈடுகட்டும் வகையில் கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வரும் எடப்பாடி பழனிசாமி, அடித்தள நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவாதம் அளித்துள்ளார்.

இருப்பினும், தொடர்ச்சியான உறுப்பினர் இழப்புகள் கட்சியின் ஒற்றுமையை பாதிக்கிறதா என்பது குறித்தும் உள்ளார்ந்த விவாதங்கள் நடைபெறுவதாகத் தெரிகிறது. தமிழக அரசியல் சூழல் வேகமாக மாறி வரும் இந்த கட்டத்தில், அதிமுக தனது அடித்தளத்தை தக்கவைக்க என்ன செய்யப் போகிறது என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version