கடும் பனி மலையில் மாயமான எவரெஸ்ட் சிகர வழிகாட்டி 6 நாட்களுக்குப் பின்னர் மரணத்தை வென்று மீட்கப்பட்டிருப்பது நம்பிக்கையின் உறுதியை வெளிப்படுத்தி இருக்கிறது.
நேபாளத்தைச் சேர்ந்தவர் தவா ஷெர்பா (Dawa Sherp). எவரெஸ்ட் சிகரத்துக்கு மலையேற்றம் செல்பவர்களுக்கான வழிகாட்டியாக இருந்து வருகிறார். புகழ்பெற்ற மலையேற்ற வீரர் எட்மண்ட் ஹிலாரியின் நினைவாக இவரை ஹிலாரி தவா எனவும் மலையேற்றத்துக்கு வருபவர்கள் அழைப்பதுண்டு.
கடந்த மே மாதம், எவரெஸ்ட் சிகரத்துக்கு சென்ற குழுவினருக்கு வழிகாட்டியாகச் சென்ற தவா ஷெர்பா, பின்னர் கீழே வரும்போது மாயமாகி இருக்கிறார்.
7500 அடி உயரத்துக்கு மேல் கடும்பனியில் மாயமானவரைக் கண்டுபிடிக்க முடியாமல் உடன் சென்றவர்கள் இறங்கியுள்ளனர்.
கடும் குளிர், உறைபனி, குறைவான ஆக்ஸிஜன் உள்ள அந்தப் பகுதியில் மாயமான தவா ஷெர்பா நிச்சயம் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டுள்ளது. அவரின் மனைவியும் கூட காத்மண்டுவில், கணவருக்கு இறுதிச் சடங்கு செய்துவிட்டார்.
ஆனால், எல்லோரின் எண்ணங்களையும் உடைத்துப்போட்டு 5 நாட்களாக மரணத்துடன் தனது நம்பிக்கையைக் கொண்டு மோதி உயிர்பிழைத்திருக்கிறார் தவா ஷெர்பா.
வியாழக்கிழமை அன்று, எவரெஸ்ட் மலையைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு தூய்மைக் குழுவினர், ஒரு மனிதர் மெல்ல மெல்ல பனிப்பாறைகளுக்கு நடுவே இருந்து தவழ்ந்து வருவதைப் பார்த்து அதிர்ச்சியானவர்கள், அருகில் சென்றுள்ளனர். அப்போதுதான் அது தவா ஷெர்பா எனத் தெரியவர, உடனடியாக துரிதமாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினர்.
இதன்பின்னர், உயிருடன் மீட்கப்பட்ட தவா ஷெர்பா மருத்துவ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக வழிகாட்டியாக இருந்த ஷெர்பா, தனது அனுபவத்தின் மூல்மும், மலையேற்றத்துக்கு வந்தவர்கள் விட்டுச் சென்ற கூடாரங்களைப் பயன்படுத்தி குளிரில் இருந்து தன்னைக் காத்துக் கொண்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு எவரெஸ்ட் மலையேற்ற சீசனில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகரம் தொட்டு சாதனை நிகழ்த்தியுள்ள நிலையில், மாயமாகி ஆறு நாட்களுக்குப் பின்னர் மரணத்தை வென்றுள்ள தவா ஷெர்பாவின் நம்பிக்கைதான் மிகப்பெரும் சாதனையாக மலையேற்றம் செல்பவர்களால் பார்க்கப்படுகிறது.
