2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் L பிரிவில் சனிக்கிழமை நடைபெறும் பனாமா அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில், காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் ரீஸ் ஜேம்ஸ் விளையாடமாட்டார் என தலைமை பயிற்சியாளர் தாமஸ் டுச்செல் உறுதிப்படுத்தியுள்ளார். அதேசமயம் புகாயோ சாகா, டெக்லான் ரைஸ் மற்றும் எலியட் ஆண்டர்சன் ஆகியோர் விளையாடத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ரீஸ் ஜேம்ஸ் தசைப்பிடிப்பு (ஹாம்ஸ்ட்ரிங்) காயம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பயிற்சியில் பங்கேற்கவில்லை. இதனால் அவர் அணியுடன் பயணம் செய்யவில்லை. இருப்பினும், தொடரின் அடுத்த கட்ட போட்டிகளுக்குள் அவர் மீண்டும் களமிறங்குவார் என்ற நம்பிக்கை இருப்பதாக டுச்செல் கூறினார்.

குரூப் L பிரிவில் இங்கிலாந்து மற்றும் கானா அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. குரோஷியா 3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், புள்ளிகள் எதுவும் பெறாத பனாமா கடைசி இடத்திலும் உள்ளது.

இதுகுறித்து டுச்செல் கூறுகையில், ரீஸ் ஜேம்ஸுக்கு லேசான ஹாம்ஸ்ட்ரிங் காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. அவருக்கு தீவிர மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போட்டிக்கு போட்டி அவரது நிலையை மதிப்பாய்வு செய்வோம். அவர் மீண்டும் தொடரில் விளையாடுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இது எதிர்பாராத ஒன்று. அவர் நல்ல உடற்தகுதியுடன் இருந்தார். அவரை இழப்பது வருத்தம்தான். ஆனால் அதற்கான மாற்று திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம்,” என்றார்.

மேலும், டெக்லான் ரைஸ் மற்றும் எலியட் ஆண்டர்சன் இன்று அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டனர். முந்தைய போட்டிக்குப் பிறகு அவர்களுக்கு சிறிய உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. ரீஸ் ஜேம்ஸைத் தவிர மற்ற அனைவரும் விளையாடத் தயாராக உள்ளனர். இறுதி முடிவை போட்டிக்கு முன் எடுப்போம்,” என தெரிவித்தார்.

2018 உலகக் கோப்பையில் பனாமாவை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து, இம்முறையும் வெற்றிக்கான வலுவான அணியாகக் கருதப்படுகிறது. மறுபுறம், பனாமா அணி இந்த தொடரில் இதுவரை ஒரு கோலும் அடிக்கவில்லை. கானா மற்றும் குரோஷியா அணிகளிடம் தலா 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version