ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

டெக்சஸின் ஆர்லிங்டனில் உள்ள AT&T மைதானத்தில் விறுவிறுப்பான ஃபிஃபா உலகக் கோப்பை 2026 அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. 2010-ம் ஆண்டிற்குப் பிறகு (16 ஆண்டுகள் கழித்து) ஸ்பெயின் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.

தனது 19-வது பிறந்தநாளைக் கொண்டாடிய இளம் வீரர் லமினே யமல், ஆட்டத்தின் 22 நிமிடத்தில் அபாரமாக முன்னேறிய போது லூகாஸ் டிகினால் ஃபவுல் செய்யப்பட்டார். இதற்கு நடுவர் வழங்கிய பெனால்டி வாய்ப்பை ஸ்பெயின் வீரர் மிகேல் ஓயர்ஸபால் கோலாக மாற்றினார்.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், ஸ்பெயின் வீரர் பெட்ரோ போரோ, டேனி ஓல்மோவுடன் இணைந்து ஒரு நேர்த்தியான ஒன்-டூ பாஸிங் மூலம் பிரான்ஸ் தடுப்பாட்டத்தை உடைத்து பந்தை வலைக்குள் தள்ளினார்.  கிலியான் எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் அணியின் அட்டாக்கிங் யுக்திகளை ஸ்பெயின் அணியின் மார்க் குக்குரைலா மற்றும் கோல்கீப்பர் உனை சைமன் ஆகியோர் தங்களின் சாதுரியமான தடுப்பாட்டத்தால் முழுமையாக முடக்கினர்.

இறுதிவரை பிரான்ஸ் வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சி பலனிக்கவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்திய ஸ்பெயின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. ஞாயிற்றுக்கிழமை நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அல்லது இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. தோல்வியடைந்த பிரான்ஸ் அணி, சனிக்கிழமை மியாமியில் நடைபெறவுள்ள மூன்றாவது இடத்திற்கான போட்டியில் விளையாட உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version