ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை விமர்சிக்கும் மேற்கத்திய நாடுகளின் இரட்டை நிலையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக சாடியுள்ளார்.
பின்லாந்தில் நடைபெற்ற ‘குல்தரந்தா பேச்சுவார்த்தை’ என்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்கும், தேசிய நலன்களுக்கும் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்திய ஆயுதங்களைக் கொண்டு இதுவரை எந்த ஒரு ஐரோப்பிய நாடும் தாக்கப்படவில்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை என்னால் அப்படிச் சொல்ல முடியாது. ஐரோப்பா நாடுகள், விற்கும் ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிராக, குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளால் (பாகிஸ்தான்) பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியர்களாகிய நாங்கள் ஒருபோதும் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததில்லை என்று குறிப்பிட்டார்.
மேலும், உக்ரைன் போருக்குப் பிறகு இந்தியாவின் பாரம்பரிய விநியோகஸ்தர்களான மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் எண்ணெய் வாங்கத் தொடங்கின. இதனால் சந்தையில் ஏற்பட்ட விலை மற்றும் தட்டுப்பாடு காரணமாக, இந்தியா தனது தேவையை பூர்த்தி செய்ய ரஷ்ய எண்ணெயை வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.
உலகப் பொருளாதாரச் சந்தையை சமநிலையில் வைத்திருக்க ரஷ்ய எண்ணெயை வாங்குமாறு தொடக்கத்தில் இந்தியாவை அமெரிக்காதான் ஊக்குவித்தது. ஆனால், பின்னர் அதற்கு வரி விதித்து, தற்போது மீண்டும் தடைகளை நீக்கியுள்ளது. இதில் எந்த ஒரு பெரிய கொள்கையோ அல்லது தார்மீக நெறியோ இல்லை என்பதால், மேற்கத்திய நாடுகள் இதில் புனிதர்களைப் போல நாடகமாடத் தேவையில்லை.
எந்தவொரு போராக இருந்தாலும், அது உக்ரைன் போராகவோ அல்லது ஈரான் மோதலாகவோ இருந்தாலும், அதன் பாதிப்பு உலகளவில் எதிரொலிக்கிறது. எனவே, அனைத்து மோதல்களுக்கும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
