கோவை அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்து, தப்பி ஓடிய ,ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பிம்முடு அஜித் குமார். இவர் கார் விற்பனை செய்பவர்களின் தகவலை பெற்று , OLX செயலியில் தனது கார் என்பதை போல பதிவேற்றம் செய்து பல லட்சம் மதிப்புடைய காருக்கு  ஒரு சில லட்சங்கள் மட்டும்  அட்வான்ஸாக பெற்றுக் கொண்டு மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

இவர் மீது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 30 க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட பிம்முடு அஜித்குமார், உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அங்கிருந்து தப்பிச் சென்றார்.

ஆந்திராவில் இருந்து தப்பிய  அவர் , திருப்பூர் மாவட்டத்தில் இதேபோல கார் விற்பனை செய்வது போல இருவரிடம் பணம் பெற்று மோசடி செய்து உள்ளார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் பிம்முடு அஜித் குமாரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர் கோவை மத்திய சிறையில் கடந்த வாரம் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் சிறையில்  உடல்நிலை சரியில்லை என தெரிவித்ததை தொடர்ந்து , கோவை மத்திய சிறையில் இருந்த அவரை,  கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டிற்கு சிகிச்சைக்காக போலீசார் மாற்றியுள்ளனர்.

இந்தநிலையில்  அங்கிருந்தும் பிம்முடு அஜித் குமார் தப்பிச் சென்றுள்ளார். ஆந்திர பாணியைப் பின்பற்றி, தப்பிய பிம்முடுவை கோவை பந்தய சாலை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version