அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத்தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் இறுதிச்சடங்கு அடுத்த மாதம் ஜூலையில் டெஹ்ரானில் நடைபெறும் என ஈரான் அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன. சுமார் ஆறு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாபெரும் அஞ்சலி நிகழ்வில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் ‘ஃபார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜூலை 4 மற்றும் 5 தேதிகளில் டெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி பிரார்த்தனை மைதானத்தில் அலி காமெனிக்கான பிரியாவிடை மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும். ஜூலை 6-ல் மாபெரும் இறுதி ஊர்வலம் டெஹ்ரானில் நடைபெறும். ஜூலை 7-ல் புனித நகரமான கோம் (Qom) நகரில் சிறப்பு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும். ஜூலை 9 -ல் அலி காமெனியின் சொந்த ஊரான மஷாத்தில் இறுதிச்சடங்குகள் நிறைவடைந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இறுதிச்சடங்கு தாமதத்திற்கான காரணம் என்ன?
முன்னதாக, இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் மாதமான முகரம் மாதத்தின் தொடக்கத்தில் இறுதிச்சடங்கை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கி.பி 680-ல் நடந்த கர்பலா போரில் கொல்லப்பட்ட இமாம் உசேனுக்கான வருடாந்திர துக்க அனுசரிப்பில் மக்கள் முழுமையாக ஈடுபட வசதியாக, அலி காமெனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளை ஜூலை மாதத்திற்கு ஈரான் அரசு ஒத்திவைத்துள்ளது.
அயத்துல்லா ருஹோல்லா கொமேனிக்கு பிறகு, ஈரானின் இரண்டாவது உச்சத்தலைவராக 1989 ஜூன் மாதம் பொறுப்பேற்றவர் 86 வயதான அலி காமெனி. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய கூட்டுத் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெருங்கும் அமைதி ஒப்பந்தம் : கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் அமெரிக்கா – ஈரான் போர் தற்போது முடிவுக்கு வரும் தருவாயை எட்டியுள்ளது. வாஷிங்டன் மற்றும் டெஹ்ரான் இடையே அமைதி ஒப்பந்தம் எந்த நேரத்திலும் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை இன்று (ஜூன் 14)கையெழுத்தாகும் என டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று சனிக்கிழமை தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்ட அவர், “நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகத் திட்டமிடப்பட்டுள்ளது. அது கையெழுத்தான மறுகணமே ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச போக்குவரத்துக்காகத் திறக்கப்படும்,” எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஞாயிற்றுக்கிழமையன்றே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்பதை ஈரான் நிராகரித்துள்ளது. அதேவேளையில், “அமைதி ஒப்பந்தம் முன்னெப்போதையும் விட தற்போது மிக நெருக்கத்தில் உள்ளது” என்பதை ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தாகும் சரியான நேரம் குறித்து ஈரான் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.
