மறைந்த ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலீ கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானை கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி வந்த உச்ச தலைவர் அலீ கமேனி, கடந்த பிப்ரவரி 28 அன்று டெஹ்ரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் முன்னதாக மார்ச் 4 முதல் மார்ச் 6-க்குள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், பிராந்தியத்தில் நிலவி வந்த போர்ச் சூழல் காரணமாக இந்த நிகழ்வுகள் தள்ளிவைக்கப்பட்டு, தற்போது வரும் ஜூலை 5 முதல் ஜூலை 9 வரை நடத்த ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.

திட்டமிடப்பட்டுள்ள அட்டவணையின்படி, ஜூலை 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் டெஹ்ரான் மற்றும் கியோம் (Qom) ஆகிய நகரங்களில் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற உள்ளன. அதனைத் தொடர்ந்து, இறுதி அடக்கச் சடங்கு நிகழ்வு ஜூலை 9 அன்று மஷ்ஹாத் (Mashhad) நகரில் நடைபெற உள்ளது.

இந்த இறுதி ஊர்வலத்தில் ஈரானில் இருந்து மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 2 கோடி மக்கள் அஞ்சலி செலுத்த திரளுவார்கள் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். இது உண்மையானால், 1989-ல் ஈரானிய குடியரசை நிறுவிய அயதுல்லா ருஹொல்லா கொமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 1 கோடி மக்களின் உலக சாதனையை இது முறியடிக்கும் எனக் கூறப்படுகிறது.

ஈரான் அதிபர் தரப்பிலிருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், டெல்லியில் இருந்து பிரதமர் மோடியின் ஈரான் பயணம் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version