நீட்-யுஜி தேர்வு முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும் மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார்.

ஆனால், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புதிய நிபந்தனைகளை விதித்து நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டிய அவர், “நீட் விவகாரத்தில் விவாதம் நடந்தால் அரசு எடுத்த நடவடிக்கைகளும், காங்கிரஸ் மாணவர்களின் பிரச்சினையை அரசியலாக்குகிறது என்ற உண்மையும் வெளிவந்துவிடும் என்பதால்தான் அவர்கள் விவாதத்தைத் தவிர்க்கின்றனர்” என்றார்.

மேலும், “காங்கிரஸ் கட்சிக்கு தீர்வு வேண்டாம்; அவையின் செயல்பாடுகளை முடக்குவதே நோக்கம். பதிலளிக்கத் தயாராக இருக்கும் அமைச்சர்களைப் பேசவிடாமல் தடுக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

வினாத்தாள் கசிவு மிகவும் உணர்வுப்பூர்வமான பிரச்சினை என குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், “வினாத்தாளை கசியவிட்டவர்கள், வாங்கியவர்கள், விற்றவர்கள் என சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரதமரும் குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்துள்ளார்” என்றார்.

மறுதேர்வு நடத்துதல், தேர்வு முடிவுகளை வெளியிடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அரசு விரைந்து மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், இந்தச் சூழலிலும் பல மாணவர்கள் சவால்களை சமாளித்து சிறந்த மதிப்பெண்களைப் பெற்று வெற்றி கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அரசும் பிரதமரும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version