முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மிழக ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.5,000 கோடி மதிப்பிலான பணிகளில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில்,

இந்த திட்டத்தின் கீழ் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படாமல், தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு முறைகேடாக நிதி விடுவிக்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், எ.வ.வேலு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை ரத்து செய்யவும், தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யவும் எ.வ.வேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இன்று வழக்கு விசாரணைக்கு வண்ந்போது, எ.வ.வேலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் திருத்தங்களின்படி அரசின் முன் அனுமதி இன்றி வழக்குப்பதிவு செய்ய முடியாது என்றும், அரசுக்கு எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை என்றும் வாதிட்டனர். மேலும், மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றிருக்கும் நிலையில் தேவையின்றி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத் துறை, பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் சுமார் ரூ.195 கோடி வரை ஒப்பந்ததாரருக்கு முன்கூட்டியே நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு ஜூலை 27-க்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டார். அதுவரை எ.வ.வேலுவுக்கு எதிராக எந்தவித கடும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

மேலும், ஜூலை 15-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன், எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version