பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், இளம் பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மர்ம நபரால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு கே.ஆர்.புரம் காவல் எல்லைக்குட்பட்ட சீகனஹள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சோமசுந்தர் (52), இவரது மனைவி முத்துலட்சுமி (48) மற்றும் இவர்களது இளைய மகள் சுப்ரியா (19) ஆகிய மூவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தனர்.

இவர்களது மூத்த மகள், வாலிபர் ஒருவருடன் கடந்த இரண்டு மாதங்களாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ‘லிவ்-இன்’ உறவில் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை சோமசுந்தர், முத்துலட்சுமி மற்றும் சுப்ரியா ஆகியோர் மூத்த மகளின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

அப்போது, பெற்றோருக்கும் அந்த வாலிபருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த அந்த வாலிபர், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தம்பதியினர் மற்றும் அவர்களது இளைய மகளைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கே.ஆர்.புரம் போலீசார், உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலைச் சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தப்பியோடிய அந்த வாலிபரைத் தேட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொலைக்கான துல்லியமான காரணம் என்ன? அவர்களுக்குள் என்ன தகராறு ஏற்பட்டது? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version