கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த புத்தூர் ஊராட்சி மும்மாட்சி ரெட்டிபட்டி பகுதியில் விவசாயத் தோட்டத்தில் வசித்து வருபவர் சின்னச்சாமி. இவரது மனைவி பாப்பம்மாள் (80). இவர்களுக்கு மூன்று மகன்கள்,  மூன்று மகள் உள்ளன.

இவர்களுக்கு சொந்தமாக சுமார் 13 ஏக்கர் விவசாயம் தோட்டம் உள்ளது. இந்தநிலையில், இவர்களுடன் மகன் ராஜசேகரும், கணவரை இழந்த மூத்த மகள் மஞ்சுளாவும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று நச்சலூருக்குச் சென்றுவிட்டு ராஜசேகர் வீடு திரும்பியபோது, தாயும் சகோதரியும் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பாப்பம்மாளை கத்தியால் குத்தியுள்ளனர்; அதனைத் தடுத்த மகள் மஞ்சுளாவிற்கும் சரமாரியாகக் கத்திக்குத்து விழுந்துள்ளது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி பாப்பம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மஞ்சுளா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த கரூர் எஸ்பி ஹரிஹிரன் பிரசாத், டிஎஸ்பி மணிகண்டன் மற்றும் நங்கவரம் காவல் ஆய்வாளர் லதா தலைமையிலான காவல்துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்ததுடன், துப்பறிவு நாய் ‘லக்கி’ வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. நிலப்பிரச்சினை, முன்விரோதம் அல்லது சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version