நவீன தொழில்நுட்பம் உலகை மாற்றி வரும் வேளையில், ரோபோக்கள் மனிதர்களுக்கு சாத்தியமற்ற பல சிக்கலான பணிகளைச் செய்து வருகின்றன. ஆனால், சீனாவில் ஒரு புதிய போக்கு அதிசயத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கு ரோபோக்களைப் பயன்படுத்தி பிச்சை எடுக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

சமீபத்தில் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் ஒரு பரபரப்பான நடைபாதையில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மனித உருவம் கொண்ட ரோபோ ஒன்று மண்டியிட்ட நிலையில் தரையில் அமர்ந்திருக்கிறது. கைகளைக் கூப்பி, கண்ணியமாகத் தலை வணங்கி, கடந்து செல்லும் பாதசாரிகளிடம் உதவி கோருகிறது. அதன் முன் ஒரு சிறிய தட்டும், பணம் செலுத்த QR கோடும் வைக்கப்பட்டுள்ளன. ரோபோவின் உடலில் பொருத்தப்பட்ட LED திரையில் “ரீசார்ஜ் செய்ய பணம் இல்லை, தயவுசெய்து மின்சாரக் கட்டணத்துக்கு உதவுங்கள்” என்ற வாசகங்கள் ஒளிர்கின்றன. ஸ்பீக்கரிலும் இதே கோரிக்கை ஒலிக்கிறது.

இந்த ரோபோ, சீனாவின் புகழ்பெற்ற யூனிட்ரீ ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் ‘யூனிட்ரீ ஜி1’ (Unitree G1) மாடலாகும். இதே மாடலின் மற்றொரு ரோபோ, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈக்வடாரில் உள்ள சிம்போராசோ எரிமலையில் ஏறி உலக சாதனை படைத்து பாராட்டுகளைப் பெற்றது. ஆனால், இப்போது அதே தொழில்நுட்பம் பிச்சை எடுக்கும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்களிடையே பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. சிலர், “ரோபோக்கள் இப்போது பிச்சை எடுக்கும் தொழிலையும் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. ஏஐ மனிதர்களை முழுமையாக வெல்லும் காலம் நெருங்கிவிட்டது” என விமர்சிக்கின்றனர். மற்றவர்கள் இதை புத்திசாலித்தனமான விளம்பர யுக்தியாகப் பார்க்கின்றனர். ரோபோவை வழக்கமான வேலையில் காட்டியிருந்தால் இவ்வளவு கவனம் கிடைத்திருக்காது; பிச்சை எடுக்கும் காட்சி மூலம் பெரும் பப்ளிசிட்டி கிடைத்துள்ளது என அவர்கள் கூறுகின்றனர். வீடியோவில் பல பாதசாரிகள் ரொக்கப் பணம் போடுவதையும், QR கோடை ஸ்கேன் செய்து டிஜிட்டல் பணம் அனுப்புவதையும் காண முடிகிறது.

இது சீனாவில் முதல் முறையல்ல. பெய்ஜிங், செங்டூ, புஜோ உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் “ரோபோ பிச்சைக்காரர்கள்” ஏற்கெனவே காணப்படுகின்றனர். அவை பெரும்பாலும் “என் மொபைலை சார்ஜ் செய்ய பணம் இல்லை” போன்ற உணர்ச்சிகரமான வாசகங்களைப் பயன்படுத்தி மக்களிடம் உதவி கோருகின்றன. இந்தச் சம்பவம், தொழில்நுட்பத்தின் இரட்டை முகத்தை வெளிப்படுத்துகிறது. ஒருபுறம் அதிநவீன சாதனைகள், மறுபுறம் புதிய வகை வணிக மற்றும் சமூகப் பிரச்சினைகள். ரோபோக்களின் பயன்பாடு விரிவடையும் போது, அவற்றின் நெறிமுறைப் பயன்பாடு குறித்த விவாதங்கள் தவிர்க்க முடியாதவையாகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version