கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், அண்டை மாநிலமான கேரளாவின் அடர்ந்த வனப்பகுதிகளிலிருந்து வெளியேறிய காட்டு யானைகளின் நடமாட்டம் அண்மைக்காலமாகத் தீவிரமடைந்துள்ளது.
இங்குள்ள தனியார் தேயிலைத் தோட்ட எஸ்டேட் பகுதிகள் மட்டுமின்றி, சோலையார், முடிஸ், பன்னிமேடு, மஞ்சுக்கபாறை உள்ளிட்ட முக்கியச் சாலைகளிலும் யானைக் கூட்டங்கள் அடிக்கடி உலா வருகின்றன. குறிப்பாக, சாலக்குடி – அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் மலைப்பாதையில் ஒற்றை யானைகள் மற்றும் கூட்டமாகச் சேர்த்து 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இதில் ‘கபாலி’ என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் ஒற்றை யானை, அந்த வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களைத் துரத்துவதைத் வழக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு கேரளா அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் இந்த மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாகச் சாலையின் நடுவே காட்டு யானைகள் கூட்டம் நின்றுகொண்டிருந்ததைக் கண்டு ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார்.
ஆபத்தை உணர்ந்த ஓட்டுநர், உடனடியாகப் பேருந்தை ரிவர்ஸ் எடுக்க முயன்றார். அப்போது ஆத்திரமடைந்த ஒற்றை யானை ஒன்று, மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து அரசுப் பேருந்தை அதிரடியாக முட்டித் தாக்கியது. பேருந்துக்குள் இருந்த பயணிகள் மரண பயத்தில் அலறினர்.
வால்பாறை மற்றும் அதிரப்பள்ளி மலைப்பாதைகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் மிகத் தீவிரமாக இருப்பதால், இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்குமாறும், வாகனங்களைச் சாலையோரம் நிறுத்தக் கூடாது என்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
