’ஏற்கனவே அவங்களுக்கும், நமக்கும் மேகதாது பிரச்சனை இருக்கு.. இதுல தமிழ், கன்னடம் எது பெருசுன்னு ஒரு பிரச்சனையா?’ என தோன்ற வைத்திருக்கிறது கமல்ஹாசனின் வார்த்தைகள். கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசனுடன் கூட்டணி வைத்து ”தக் லைஃப்” படத்தை எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம்.
சிம்பு, அபிராமி, திரிஷா, அசோக் செல்வன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்து. வரும் 5-ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், ஊர் ஊராக சென்று புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் படக்குழுவினர். கடந்த 24-ம் தேதி இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். இந்த மேடையில் பேசிய கமல்ஹாசன், ”தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்” எனக் கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கர்நாடகாவின் முதலமைச்சர் சித்தராமையா தொடக்கி, பல அரசியல் கட்சி தலைவர்களும், கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
கமல் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது எனவும், தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் கமல்ஹாசன் கூறியிருந்தார். கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாகாது என கர்நாடக திரைப்பட சம்மேளனத் தலைவர் நரசிம்மலு கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,, ”இது ஒரு ஜனநாயக நாடு. நான் சட்டம் மற்றும் நீதியை நம்புகிறேன். கர்நாடகா, ஆந்திரா, மற்றும் கேரளா மீதான எனது அன்பு உண்மையானது. நான் தவறாக பேசி இருந்தால், மன்னிப்பு கேட்பேன், இல்லையென்றால் மாட்டேன்” எனக் கூறினார். இதனால் தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாகுமா? ஆகாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.