சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக முதலிடத்தில் நீடித்து வந்த இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் தனது முதலிடத்தை இழக்க, சக நாட்டு வீரரான ஹாரி ப்ரூக் முதல்முறையாக நம்பர்-1 இடத்திற்கு மகுடம் சூடியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் சொற்ப ரன்களுக்கு (1 மற்றும் 8 ரன்கள்) ஆட்டமிழந்ததால், அவர் முதலிடத்திலிருந்து இரண்டு இடங்கள் சறுக்கி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மறுபுறம், நியூசிலாந்துக்கு எதிரான கடினமான ஆடுகளத்தில் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த இங்கிலாந்து அணியின் துணைக் கேப்டன் ஹாரி ப்ரூக், 2024-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மீண்டும் உலகின் நம்பர்-1 டெஸ்ட் பேட்ஸ்மேன் அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் காட்டிய சிறப்பான ஆட்டத்தின் காரணமாக தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் கேப்டனாக களமிறங்கி 126 ரன்கள் குவித்த சுப்மன் கில், இரண்டு இடங்கள் முன்னேறி 8-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை (9-வது இடம்) பின்னுக்குத் தள்ளி, தற்போது டெஸ்ட் தரவரிசையில் அதிக ரேட்டிங் கொண்ட இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார்.

ஆல்-ரவுண்டராக அசத்திய வாஷிங்டன் சுந்தர், பேட்டிங் தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி 42-வது இடத்தையும், ஆல்-வுண்டர் தரவரிசையில் 9-வது இடத்தையும், பந்துவீச்சில் 48-வது இடத்தையும் பிடித்து மூன்று துறைகளிலும் முத்திரை பதித்துள்ளார்.

தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 6 விக்கெட்டுகள் மற்றும் 28 ரன்கள் குவித்து ‘ஆட்டநாயகன்’ விருது வென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த மானவ் சுதர், ஆல்-ரவுண்டர் பட்டியலில் 82-வது இடத்திற்கும், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 72-வது இடத்திற்கும் முன்னேறி முதல்முறையாக டாப் 100-க்குள் நுழைந்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சன், 7 இடங்கள் முன்னேறி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 10-வது இடத்தை எட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என வென்றதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் ஸ்பின்னர் அப்ரார் அகமது இரண்டு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தையும், வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி 4 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version