அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், இரு எம்எல்ஏக்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் (தவெக)வில் இன்று இணைகின்றனர். இதனால் அதிமுகவில் மேலும் பலத்த அதிர்வு ஏற்பட்டுள்ளது. கரூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, தங்கள் ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைகின்றனர்.

இவர்களுடன் முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி, முன்னாள் எம்எல்ஏக்களான இளம்பை ஆர். தமிழ்ச்செல்வன், எம். ராம்குமார், எஸ்.பி. திருஞானசம்பந்தம், எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் உள்ளிட்ட பல முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் பெரும் எண்ணிக்கையில் தவெகவில் ஐக்கியமாக உள்ளனர்.

இன்று காலை 10 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்த இணைப்பு விழா பிரமாண்டமாக நடைபெறுகிறது. ஹோட்டலின் நுழைவு வாயிலில் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டு, அதிமுகவில் இருந்து வருபவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை முதலே அதிமுகவினர் கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்தனர்.

சுமார் 200 பேருந்துகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட கார்கள் மூலம் தொண்டர்கள் வருகை தந்தனர். விழா ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. வருகை தந்தவர்களுக்கு சுடச்சுட இட்லி, பொங்கல், வடை உள்ளிட்ட உணவு வகைகள் தயாராக பரிமாறப்பட்டன. அதிமுகவில் இருந்து வரும் நிர்வாகிகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், இணைப்பு நிகழ்ச்சி உற்சாகமாகத் தொடங்கியது.

அதிமுகவில் இருந்து தொடர்ச்சியாக முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக அதிமுகவில் இருந்து பலர் விலகி தவெகவுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது. இன்றைய இணைப்பு மூலம் தவெக தனது அடித்தளத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version