பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் ₹100 கோடி மதிப்புள்ள தர்ம சாசன நிலத்தை, நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி வெறும் ₹2 கோடிக்கு போலி ஆவணம் மூலம் சட்டவிரோதமாகப் பத்திரம் பதிவு செய்த சார்பதிவாளர் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட 4 பேர் மீது போலீசார் புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பழனி நகர் சன்னதி வீதியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமாக 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. இது கடந்த 1888-ம் ஆண்டு குப்புச்சாமி மணியகாரர் என்பவரால் தர்ம சாசனமாக வழங்கப்பட்ட பொது அறக்கட்டளைச் சொத்தாகும். விதிகளின்படி இந்த நிலத்தை விற்கவோ, வில்லங்கப்படுத்தவோ யாருக்கும் உரிமை இல்லை.
இச்சொத்தின் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றி, கடந்த செப்டம்பர் 2025-ல் பழனி கோயில் நிர்வாகம் இந்த நிலத்தை முழுமையாகக் கையகப்படுத்தியது. தற்போது இது ‘கட்டணமில்லா இலவச வாகன நிறுத்துமிடமாக’ பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது. மேலும், இச்சொத்தை விற்க இயலாது என்றும், கோயில் இணை ஆணையரே இதன் தக்காராக (நிர்வாகி) நீடிப்பார் என்றும் உச்ச நீதிமன்றம் வரை தீர்ப்புகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய கடுமையான சட்டப்பாதுகாப்பு மற்றும் கோயில் நிர்வாகத்தின் ஆட்சேபனைகளையும் மீறி, கடந்த ஜூலை 6ல் இந்த நிலம் தனிநபர்கள் பெயரில் சட்டவிரோதமாகப் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பொறுப்பில் இருந்த பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் என்பவர், நீதிமன்ற உத்தரவுகளைப் புறந்தள்ளி தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து இப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
‘தண்டபாணி சுவாமிகள் டிரஸ்ட்’ நிர்வாகி எனக் கூறிக்கொள்ளும் விழுப்புரத்தைச் சேர்ந்த முருகதாஸ் என்பவர் மூலம், உடுமலையைச் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனியைச் சேர்ந்த சேதுபதி ஆகியோருக்கு ₹100 கோடி மதிப்புள்ள சொத்து வெறும் ₹2 கோடிக்கு கிரையம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மெகா மோசடி குறித்து இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பாளர் முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், பழனி அடிவாரம் காவல் நிலையத்தினர் புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சம்ஹிதா (BNS, 2023) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

