வெப்ப அலையை எதிர்கொள்ள மாநில, மாவட்ட அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில் மே மாதம் மூன்றாவது வாரத்தின் தொடக்கத்திலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கி, பல இடங்களில் தீவிர மழைப்பொழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இந்த ஆண்டு மொத்த பருவமழை இயல்பைவிட குறைவாகப் பெய்யும் என எச்சரித்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலத்தில் நாடு முழுவதும் சராசரியில் 90 சதவீதம் மட்டுமே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 6 சதவீதம் குறைவாகவே பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வடகிழக்கு மாநிலங்களில் மழைப்பொழிவு இயல்பு நிலையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே பல பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், வெள்ள அபாயம் மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மழைப்பொழிவு குறைவு மட்டுமின்றி, ஜூன் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என IMD தெரிவித்துள்ளது. குறிப்பாக அரியானா, பஞ்சாப், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், குஜராத், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இயல்பைவிட அதிக நாட்கள் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையும், குறைந்த மழையும் இணைந்தால் விவசாயத் துறை கடுமையாகப் பாதிக்கப்படும். குறிப்பாக கோடைப் பயிர்கள், நீர் தேவை அதிகமுள்ள பயிர்கள் மற்றும் மழையை நம்பியுள்ள பகுதிகளில் பெரும் சவால்கள் எதிர்நோக்க நேரிடும்.

குடிநீர் ஆதாரங்கள், ஏரிகள், குளங்கள், ஆறுகளின் நீர் மட்டம் குறைய வாய்ப்புள்ளதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படலாம். மின்தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் அழுத்தம் அதிகரிக்கும்.இந்தச் சூழலை முன்னிட்டு, மாநில மற்றும் மாவட்ட அரசுகள் வெப்ப அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்களுக்கு வெப்ப அலை தொடர்பான எச்சரிக்கைகளை வழங்குதல், நீர் தேக்கங்களைப் பாதுகாத்தல், விவசாயிகளுக்கு ஏற்ற மாற்றுப் பயிர் மற்றும் நீர்ப்பாசன ஆலோசனைகளை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அவசியம்.

வானிலை நிபுணர்கள், பருவமழை குறைவு ஏற்படும் பட்சத்தில் நீர் மேலாண்மை, பயிர் காப்பீடு மற்றும் மாற்று வருமான முறைகளுக்கு விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கியபோதிலும், அதன் அளவு போதுமானதாக இல்லாத சூழல் உருவாகியுள்ளது. எனவே, அரசுகள், விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்தச் சவாலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version