வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஜூலை மாதம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தனிநபர் வருமான வரி தாக்கல் முதல் TDS மற்றும் இதர வரி தொடர்பான படிவங்களைச் சமர்ப்பிப்பது வரை, இந்த மாதத்தில் பல முக்கிய காலக்கெடு முடிவடைகின்றன. எனவே, அபராதம் மற்றும் வட்டி அபாயத்தைத் தவிர்க்க, இந்தத் தேதிகளைக் குறித்து வைத்துக்கொள்வது அவசியம்.
ஜூலை 7 TDS டெபாசிட் செய்ய கடைசி நாள்: காலாண்டு அடிப்படையில் TDS டெபாசிட் செய்பவர்கள், ஏப்ரல் – ஜூன் காலாண்டிற்கான TDS தொகையை ஜூலை 7-க்குள் டெபாசிட் செய்ய வேண்டும். இதனுடன் தொடர்புடைய அறிவிப்புகள் மற்றும் ஆவணங்களையும் அன்றைய தினத்திற்குள் பதிவேற்ற வேண்டும்.
ஜூலை 15: நிறுவனங்களுக்கான அறிக்கை சமர்ப்பிப்பு: நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் தாங்கள் சமர்ப்பிக்க வேண்டிய குறிப்பிட்ட அறிக்கைகள் மற்றும் தகவல்களை ஜூலை 15-க்குள் வழங்க வேண்டும். இது முக்கியமாக நிறுவனங்களுக்குப் பொருந்தும்.
ஜூலை 30 TDS படிவம் சமர்ப்பிப்பு: ஜூன் மாதத்தில் குறிப்பிட்ட சில பணப் பரிவர்த்தனைகளுக்கு வரி பிடித்தம் செய்த நபர்கள் அல்லது நிறுவனங்கள், அதற்கான சலான்-கம்-ஸ்டேட்மெண்ட் (Challan-cum-statement) படிவத்தை ஜூலை 30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஜூலை 31 வருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாள்: தனிநபர் வரி செலுத்துவோருக்கு மிக முக்கியமான நாள் இது. நிதியாண்டு 2025-26-க்கான ITR-1 மற்றும் ITR-2 படிவங்களை ஜூலை 31, 2026-க்குள் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். இதைத் தவறவிட்டால், அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், நஷ்டத்தை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லும் சலுகையும் கிடைக்காது.
ஜூலை 31 TDS/TCS ரிட்டர்ன்ஸ் மற்றும் பிற படிவங்கள்: ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கான TDS மற்றும் TCS ரிட்டர்ன்களை நிறுவனங்கள் ஜூலை 31-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். வருமான வரி விலக்குகளைக் கோருவதற்கான படிவங்களையும் அன்றைய தினத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். (உதாரணமாக: நிலுவைத் தொகைக்கு வரி நிவாரணம் கோர Form 10E, வாடகைதாரர்கள் deduction கோர Form 10BA, வெளிநாடுகளில் இருந்து வருமானம் பெறும் எழுத்தாளர்கள் மற்றும் காப்புரிமைதாரர்களுக்கு Form 10H).
ஜூலை 31-க்குள் வருமான வரி தாக்கல் செய்யத் தவறினால், வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மேல் இருந்தால் ரூ. 5,000-ம், ரூ. 5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் ரூ. 1,000-ம் அபராதமாக வசூலிக்கப்படும். நிலுவையில் உள்ள வரித் தொகையின் மீது பிரிவு 234A-ன் கீழ் மாதம் 1 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். எனவே, கடைசி நேர அவசரத்தைத் தவிர்த்து, உரிய காலத்திற்குள் உங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
