இங்கிலாந்தில் உயர்க்கல்வி பயின்று வந்த பஞ்சாப்பை சேர்ந்த மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சமப்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் டர்ன் தாரன் பகுதியை சேர்ந்தவர் கிரந்தீப் கவுர் என்ற 24 வயது இளம்பெண். இவர் 2 வருடத்திற்கு முன்பு மாணவர் விசாவில் இங்கிலாந்திற்கு சென்றுள்ளார். தனது படிப்பை முடித்த அவர், லண்டனின் ஆக்ஸ்பிரிட்ஜ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த 12-ம் தேதி காலை கிரந்திப் கவுர் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது, உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் அவரை தாக்கியுள்ளார். கிரந்தீப் அவரிடம் இருந்து தப்பிக முயல, தனது பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து கிரந்தீப்பின் வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் 5 முறை குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
இந்த கோர நிகழ்வில் படுகாயமடைந்த கிரந்தீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த லண்டன் போலீஅசர் கிரந்தீப்பின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கு பிறகு குற்றவாளி கையில் கத்தியுடன் வீட்டு வாசலை கடந்து செல்லும் சிசிடிவி காட்சியை கைப்பற்றிய போலீசார், தீவிர விசாரணையை முடுக்கிவிட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், குற்றவாளி இங்கிலாந்தை சேர்ந்த 44 வயதான டேனியல் சீன் ஜேம்ஸ் என்பது தெரியவந்துள்ளது. அத்தோடு லண்டனில் 20 வயது இளைஞரை கத்தியால் குத்திவிட்டு தப்பிய டேனியல் கிரந்தீப் வீட்டில் குதித்ததும், அங்கிருந்த கிரந்தீப்பையும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதும் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
கிரந்தீப்பின் தந்தை சுக்தேவ் சிங் மறும் தாய் பால்ஜித் கவுர் தங்களது நிலத்தை விற்று, மகளை லண்டனில் படிக்க வைப்பதற்கான கட்டணத்தை செலுத்தியதாகவும், தற்போது தங்களது மகளையும் காண முடியாமல் போனதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். தங்கள் மகளின் உடலை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
