இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணத் திட்டமான ககன்யான் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் குழு கலனுக்கான பாராசூட் வேகக்குறைப்பு அமைப்பை சோதிக்கும் முதல் தரைதள சோதனையை வெற்றிகரமாக நடத்தினர்.

பிரதமர் நரேந்திர மோடி 2018-ம் ஆண்டு அறிவித்த இந்த திட்டம், இந்தியாவை உலகின் விண்வெளி வல்லரசுகளின் வரிசையில் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாகக் கருதப்படுகிறது. திட்டத்தின் முக்கிய நோக்கம், மூன்று விண்வெளி வீரர்களை பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள நிலையான சுற்றுப்பாதைக்கு அனுப்பி, அங்கு மூன்று நாட்கள் தங்கச் செய்து, பின்னர் இந்தியக் கடற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறக்குவதாகும். இதன் மூலம் மனித விண்வெளி பயணத் திறனை இந்தியா நிரூபிக்கும்.

இந்த முக்கிய சோதனையில், ககன்யான் குழு கலனின் வேகத்தைக் குறைக்கும் பாராசூட் அமைப்பை சரிபார்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட தனிப்பயன் திட மோட்டார் பயன்படுத்தப்பட்டது. சோதனையின்போது, கலம் 10 முதல் 17 கிலோமீட்டர் உயரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விண்கலத்திலிருந்து பிரிக்கப்பட்டது. பின்னர் 10 பாராசூட்கள் தொடர்ச்சியாக விரிக்கப்பட்டு, கடலில் பாதுகாப்பாக விழும் நிலையை உருவகப்படுத்தி சோதிக்கப்பட்டது. மோட்டாரின் செயல்திறன் முழுமையாக எதிர்பார்த்தபடி இருந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த வெற்றி, திட்டத்தின் அடுத்த கட்டங்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. ககன்யான் திட்டத்திற்காக இஸ்ரோ ஏற்கெனவே 8,000க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இதில் சுமார் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ‘வயோமித்ரா’ என்ற எந்திர மனிதனுடன் (Humanoid) ஆளில்லா சோதனைப் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்பிறகு மேலும் இரண்டு ஆளில்லா பயணங்கள் நடத்தப்பட்டு, 2027 மார்ச் மாதம் மனித விண்வெளி வீரர்களை அனுப்பும் வரலாற்றுப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சோதனை வெற்றி, இந்திய விண்வெளித் துறையின் தொழில்நுட்ப வல்லமையை மீண்டும் உலகுக்கு நிரூபிக்கிறது. ககன்யான் திட்டம் வெற்றி பெற்றால், இந்தியா அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுடன் இணைந்து மனித விண்வெளி பயணம் மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இடம்பெறும். இஸ்ரோ விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு மற்றும் தொடர் முயற்சிகள் இந்தியாவின் விண்வெளி கனவை நனவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version