18 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூர் அணி…
ஐபிஎல்லில் சாம்பியன் கோப்பையை வெல்வது என்ற 18 ஆண்டுகால ஏக்கத்தை இன்றைய தினம் தீர்த்துக் கொண்டது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி.. இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு சாம்பியனாக உருவெடுத்தது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்.
18-வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற தொடரில் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய 4 அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. இதில் முதல் போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தியதால் பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தியது மும்பை அணி. பின்னர் பஞ்சாப் – மும்பை அணிகள் மோதிய போட்டியில் பஞ்சாப் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சார்பில் தொடக்க வீரர்களாக பில் சால்ட், விராட் கோலி களமிறங்கினர். 16 ரன்கள் சேர்த்த நிலையில் பில் சால்ட் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மயங்க் அகர்வால் அதிரயாடி ஆடி 24 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். கேப்டன் ரஜத் பட்டிதாரும் தன் பங்குக்கு 26 ரன்கள் சேர்த்து அவுட்டானார். மறுபுறம் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 43 ரன்கள் எடுத்த நிலையில், ஓமராசி பந்தில் வீழ்ந்தார். லிவிங்ஸ்டன் 25, ஜிதேஷ் ஷர்மா 24, ஷப்பர்ட் 17 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 190 ரன்கள் சேர்த்தது.
பின்னர் பஞ்சாப் அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக ப்ரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இருவரும் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். ப்ரியன்ஷ் ஆர்யா 24 ரன்கள் எடுத்தபோது ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 26 ரன்களுக்கு பிரப்சிம்ரன் சிங்கும் அவுட்டானார்.
பின்னர் வந்த ஜோஷ் இங்கிலிஷ் பெங்களூர் அணிக்கு மரண பயத்தைக் காட்டினார். 39 ரன்கள் குவித்த அவரை க்ருணால் பாண்ட்யா ஆட்டமிழக்கச் செய்தார். பெரும் எதிர்பார்ப்புடன் களத்திற்கு வந்த ஸ்ரேயாஸ் ஐயர், ஒற்றை ரன்னில் அவுட்டாக ஒட்டுமொத்த அரங்கமும் அமைதியில் உறைந்தது. பெங்களூர் அணியின் ஆதரவாளர்கள் சத்தம் விண்ணைப் பிளந்தது. நேஹல் வதேரா 15 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். மறுபுறம் உயிரைக் கொடுத்து போராடிய ஷஷாங் சிங் 61 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆனால் எஞ்சிய வீரர்கள் ஒற்றை ரன்களுக்கு தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்த பஞ்சாப் அணி வெறும் 184 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பெங்களூர் அணி வெற்றி பெற்றதும், அந்த அணியின் ரசிகர்கள் எழுப்பிய கோஷம் விண்ணைப் பிளந்தது. ஒட்டுமொத்த அரங்கமும் ஆர்சிபி, ஆர்சிபி என முழங்கியது.
விராட் கோலியின் ஜெர்சி எண் 18.. அதேபோன்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றி உள்ளது ஆச்சர்யமான ஒற்றுமை. 18 ஆண்டுகாலம் ஒரே அணிக்காக விளையாடிய வீரர் என்ற பெருமையும் விராட் கோலிக்கு உண்டு.