மத்திய கிழக்கில் புதிய போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஈரான் தரப்பில் ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்கா ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. அண்மையில் ஈரானுடன் போடப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, இன்று இரண்டாவது நாளாகத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று ஈரானின் முக்கிய இலக்குகளான புஷெர் (Bushehr) மற்றும் கார்க் (Kharg) தீவு மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. புஷெர் பகுதியில் ஈரானின் ஒரே அணு மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு நடத்தப்பட்ட தாக்குதல்கள் மூலம் ஈரான் முழுவதும் மின் தடையை ஏற்படுத்தும் நோக்கம் அமெரிக்காவுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது ஈரானின் உள்கட்டமைப்பை பலவீனப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
கார்க் தீவு ஈரானின் பொருளாதாரத்தின் மையமாகக் கருதப்படுகிறது. ஈரான் ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய்யில் சுமார் 90 சதவீதம் இந்தத் தீவு வழியாகவே செல்கிறது. மேலும், இங்கு 3 கோடி பேரல் வரை எண்ணெயைச் சேமிக்கும் பிரம்மாண்டமான கிடங்கு வசதிகள் உள்ளன. இந்த இடங்களை இலக்காக்கியதன் மூலம் ஈரான் மீண்டு வர முடியாத அளவுக்கு பொருளாதார ரீதியாக பாதிக்க அமெரிக்கா முயல்வதாகத் தெரிகிறது. டிரம்ப், கார்க் தீவை கைப்பற்றும் அச்சுறுத்தலையும் விடுத்துள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்கு மட்டுமின்றி உலகப் பொருளாதாரத்திலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. எண்ணெய் விலை உயர்வு, கப்பல் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்டவை உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கியுள்ளன. இரு தரப்பும் மேலும் தாக்குதல்களைத் தொடரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச சமூகம் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
