பசிபிக் பெருங்கடலில் எல் நினோ காலநிலை நிகழ்வு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் தென்மேற்கு பருவமழை பாதிக்கப்படக்கூடிய அபாயத்தை எதிர்கொள்ள மத்திய அரசு முன்னதாகவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு (WMO) சமீபத்தில் வெளியிட்ட எச்சரிக்கையில், எல் நினோ ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மிக வேகமாகத் தீவிரமடையும் எனத் தெரிவித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் வெப்ப அலைகள், நீடித்த வறட்சி, திடீர் வெள்ளம் மற்றும் அதீத மழைப்பொழிவு போன்ற தீவிர வானிலை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் குறிப்பாக விவசாயத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடிய இந்த நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசு ஏப்ரல் மாதத்திலிருந்தே தீவிர திட்டமிடலைத் தொடங்கியது.

நேற்று டெல்லியில் நடைபெற்ற பருவநிலை தயார்நிலை ஆய்வுக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “மழைப்பொழிவு நாட்டின் பல பகுதிகளில் சமீப நாட்களில் நல்ல அளவில் பதிவாகியுள்ளது. வழக்கமாக மழை பொய்க்கும் மாவட்டங்களின் எண்ணிக்கை 262-லிருந்து 178-ஆகக் குறைந்துள்ளது. ஜூலையில் மழைக்காலம் முன்னேறியுள்ளது. மழைப்பொழிவு பற்றாக்குறை 24 சதவீதமாகக் குறைந்துள்ளது” என்றார்.

மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பீகார், ஜார்கண்ட், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்த மாநிலங்களில் ஜூலை மாதத்தில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காரிப் பயிர்களின் நடவு பணிகள் வேகம் பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதுவரை 350 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் காரிப் பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட 91 லட்சம் ஹெக்டேர் குறைவாக இருந்தாலும், தாமதமான மழையைச் சமாளிக்க விவசாயிகளுக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) உதவியுடன் குறுகிய காலப் பயிர்கள், சோளம், பஜ்ரா, மூங் உள்ளிட்ட குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களைச் சாகுபடி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எல் நினோ பாதிப்புகளைச் சமாளிக்க ஏப்ரல் மாதமே அவசரகாலத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மாநில அரசுகளுடன் பகிரப்பட்டுள்ளன. வானிலை மாறுபாடுகளால் பயிர்கள் பாதிக்கப்படாமல் இருக்க 1.75 லட்சம் குவிண்டால் தேசிய விதை இருப்பு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கிசான் கிரெடிட் கார்டு வழங்கல் தீவிரப்படுத்தப்பட்டு, ஜூன் 30 வரை 1.14 லட்சம் விண்ணப்பங்களில் 94,000-க்கும் மேற்பட்டவை உடனடியாக ஒப்புதல் பெற்றுள்ளன. பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பொருளாதாரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

எல் நினோ கண்காணிப்புப் பிரிவு, பயிர் வானிலை கண்காணிப்புக் குழு மற்றும் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் மூலம் 24 மணி நேரமும் பருவமழை, பயிர்களின் நிலை மற்றும் சந்தை நிலவரங்கள் கண்காணிக்கப்படுகின்றன. எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள அரசு முழுமையாகத் தயாராக உள்ளது என்று அமைச்சர் உறுதி அளித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version