தமிழகத்தின் முக்கிய மருத்துவக் கட்டமைப்புகளில் ஒன்றான கோவை அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. தினந்தோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் இந்த மருத்துவமனையில், அடுக்கடுக்கான புகார்கள் தற்போது வெளியாகி உள்ளன.

சமீபத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் இரவு நேரங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போதிலும், மருத்துவமனையின் செயல்பாடுகளில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்றே சொல்லப்படுகிறது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், படுக்கை வசதி இல்லாத காரணத்தினால், மருத்துவமனை வளாகத்தின் ஓரங்களிலும், எதிரே உள்ள நகரப் பேருந்து நிலையத்திலும் கைகால்களில் கட்டுப்போட்டபடி வலியுடன் தங்கியுள்ள காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

சிகிச்சையில் உள்ள நோயாளிகளிடம் பேசியபோது, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. படுக்கை வசதி இல்லை என்ற காரணத்தைக் கூறி நோயாளிகள் பாதியில் வெளியேற்றப்படுவதாகவும், இதனால் முறையான சிகிச்சை கிடைக்காமல் அவர்கள் சாலையோரமே கதி என்று கிடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் கண்ணீர் மல்கக் கூறுகின்றனர். மேலும், போதிய உதவியாளர்கள் இல்லாத சூழலில், ஆதரவற்ற நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் பரிதவிக்கும் அவலமும் நீடிக்கிறது. முறையான ஆவணங்கள் மற்றும் பணம் கொடுத்தால் மட்டுமே சிகிச்சை என்ற நிலை இருப்பதாக அவர்கள் பகிரும் குற்றச்சாட்டுகள், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version