‘ஜனநாயகன்’ படம் வெளியீட்டு தேதி குறித்த உறுதிப்படுப்படாத தகவல்கள் ஒவ்வொரு மாதமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு நிலை குறித்த புதிய தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. எச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், தணிக்கைத் துறையிடமிருந்து சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது.

மேலும், படம் ஆன்லைனில் கசிந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இணையத்தில் படத்தின் பிரதிகள் பரவியதால் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவங்கள் படக்குழுவினருக்கு சவால்களை ஏற்படுத்தினாலும், முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பொறுப்பேற்புக்குப் பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழக மக்களிடையே ‘ஜனநாயகன்’ ஒரு சினிமா மட்டுமல்ல, அரசியல் மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த படைப்பாகவும் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இன்று வெளியான தகவல்கள் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. படக்குழுவினர் தரப்பில், அடுத்த மூன்று நாட்களுக்குள் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த மாதத்திலேயே படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, ஜூலை 16 அல்லது ஜூலை 23 ஆகிய தேதிகள் வெளியீட்டுக்கு அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

சென்சார் போர்டு படத்திற்கு தமிழில் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் பதிப்புக்கான தணிக்கைப் பணிகள் இந்த வாரத்திலேயே நிறைவடையும் நிலையில், பிற மொழிகளுக்கான (ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட) தணிக்கை நடைமுறைகள் முடிய சுமார் ஒரு வாரம் ஆகலாம். அதன் பின்னரே இறுதி வெளியீட்டுத் தேதி உறுதிப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக வெளியீட்டு தேதி குறித்த பல்வேறு யூகங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில், தற்போதைய தகவல்கள் நம்பிக்கையூட்டுவதாக உள்ளன. ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆர்வம் உச்சத்தில் இருக்கும் வேளையில், ‘ஜனநாயகன்’ விரைவில் திரையில் வெளியாகி மக்களை மகிழ்விக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version