விஜய் பாணியில் சூர்யாவும் அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ளாரா? என்ற விவாதம் தற்போது இணையத்தில் அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற நடிகராக அறியப்படுகிறார். 1997-ம் ஆண்டு ‘நேருக்கு நேர்’ திரைப்படம் மூலம் அறிமுகமான அவர், அதன்பிறகு ‘நந்தா’, ‘காக்க காக்க’, ‘பிதாமகன்’, ‘சிங்கம்’, ‘ஏழாம் அறிவு’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என்ற படத்தில் நடித்து வரும் சூர்யா, நடிப்பு உலகில் மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவரது அகரம் அறக்கட்டளை மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்கி, ஏராளமான இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வருகிறார். இத்தகைய சமூக அக்கறை காரணமாகவே அவரை மக்கள் தலைவராகப் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஒரு நிர்வாகி, “காலம் முடிவு செய்துவிட்டது. கடவுள் முடிவு செய்துவிட்டார். அவர் மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். இந்தப் பேச்சுக்கு கூட்டத்தில் கலந்துகொண்ட ரசிகர்கள் பலத்த கரவொலியுடன் வரவேற்பு தெரிவித்தனர். இச்சம்பவம் உடனடியாக சமூக வலைதளங்களில் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் அரசியலில் முழுமையாக இறங்கியுள்ள நிலையில், சூர்யாவும் அரசியல் பாதையில் செல்லப் போகிறாரா என்பது தொடர்பாக ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன. பலர் சூர்யாவின் சமூகப் பணிகளைச் சுட்டிக்காட்டி, அவர் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் தலைவராக உருவெடுப்பார் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இருப்பினும், சூர்யா தரப்பில் இதுவரை அரசியல் தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

ரசிகர் மன்ற நிர்வாகியின் தனிப்பட்ட பேச்சே இந்த ஊகங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சினிமா உலகிலிருந்து அரசியலுக்கு வரும் நட்சத்திரங்களின் வரலாறு தமிழ்நாட்டில் புதிதல்ல. எனவே, சூர்யாவின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version