புதிய ஆட்சி அமைந்ததில் இருந்து ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் என்பவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆளுங்கட்சி தவெக நிர்வாகியால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருவதை சுட்டிக்காட்டி உள்ள அவர், சென்னை ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், இன்னும் கைது செய்யப்படவில்லை என்ற செய்திகள் வருவதையும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய முதலமைச்சர் பதவி ஏற்கும் போது சொன்ன “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இது தானா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தனது சொந்தக் கட்சி நிர்வாகிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது, எப்படி நல்லா இருக்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். தவெக ஆட்சியில் குற்றம் செய்யும் சொந்த கட்சியினர் மட்டும் தான் நன்றாக இருப்பது போல் தெரிவதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

தன் கட்சித் தலைவர் முதலமைச்சராக இருப்பது பற்றியோ, அவர் கையில் இருக்கும் காவல்துறை மீதோ அவர்களுக்கு எந்த பயமும் வராமல் இருப்பது ஏன்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். மேற்கூறிய வழக்குகளில் எந்தவித ஒளிவு மறைவோ, அரசியல் குறுக்கீடோ இல்லாமல் நியாயமான விசாரணை நடைபெற்று, குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version