பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜப்பான் பிரதமர் சனயே தகாய்ச்சி சாந்தூர் இசைக்கருவியை வாசித்த சம்பவம் உலகளவில் கவனம் பெற்ற நிலையில், அதன் வரலாறு மற்றும் இந்திய கலாச்சார பாரம்பரியம் குறித்து டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் விளக்கமளித்துள்ளது.

தூதரகம் தனது சமூக வலைதளப் பதிவில், “பிரதமர் சனயே தகாய்ச்சி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து சாந்தூர் வாசித்த காட்சி உலகம் முழுவதும் மக்களை நெகிழச் செய்தது. பல நூற்றாண்டுகளாக இந்திய கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாக சாந்தூர் இருந்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

சாந்தூர் என்பது ஹாமர்டு டல்சிமர் (Hammered Dulcimer) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தந்தி இசைக்கருவி. இதன் தோற்றம் பாரசீகத்தில் இருந்ததாகக் கருதப்பட்டாலும், காஷ்மீரில் தனித்துவமான வளர்ச்சியைப் பெற்ற இந்திய சாந்தூர், இந்திய இசை மரபில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

சுமார் 100 தந்திகளைக் கொண்ட இந்த இசைக்கருவி, ‘மெஸ்ராப்’ எனப்படும் இரண்டு இலகுரக மரக் குச்சிகளால் வாசிக்கப்படுகிறது. பண்டைய சமஸ்கிருத நூல்களில் இது “நூறு தந்திகள் கொண்ட வீணை” என குறிப்பிடப்பட்டிருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

20-ஆம் நூற்றாண்டில், பண்டிட் சிவ்குமார் ஷர்மா, சாந்தூரை இந்துஸ்தானி செவ்வியல் இசைக்கேற்ப மறுவடிவமைத்து, உலக அரங்கில் அறிமுகப்படுத்தினார். அவரது முயற்சியால், சாந்தூர் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற செவ்வியல் இசைக்கருவிகளில் ஒன்றாக உயர்ந்தது.

வால்நட் மரத்தால் நுட்பமாக உருவாக்கப்படும் சாந்தூர், காஷ்மீரின் ‘சூஃபியானா மௌசிகி’ (Sufiana Mausikyi) என்ற சூஃபி இசை மரபிலும், நாட்டுப்புற மற்றும் பக்தி இசையிலும் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஜூலை 2 அன்று பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய மதிய விருந்தில், பாரம்பரிய இசைக்கருவிகளின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிவில் கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்த ஜப்பான் பிரதமர் சனயே தகாய்ச்சியை, இசைக் கலைஞர் ஒருவர் சாந்தூரை வாசிக்க அழைத்தார்.

அதைத் தொடர்ந்து தகாய்ச்சி சாந்தூரை வாசித்தார். இதைக் கண்ட பிரதமர் மோடி புன்னகையுடன் கைதட்டி பாராட்டியதோடு, அங்கு இருந்த அனைவரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version