நடிகர் கமல்ஹாசன் ‘தக் லைப்’ என்ற படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம், நாளை மறுநாள் (5-ந்தேதி) உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.
அதில் பேசிய கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து, ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னட மொழி’ என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கர்நாடக அரசியல்வாதிகள், கன்னட அமைப்புகள், கன்னட திரை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசனை கண்டித்து கன்னட அமைப்பினர் தீவிர போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கமல்ஹாசன் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் கூறி வருகின்றன. கன்னட சினிமா வர்த்தக சபையும் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட அனுமதி கிடையாது எனக் கூறியுள்ளது. இதனால் கர்நாடகத்தில் அவரது படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடக ஐகோர்ட்டில், படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்தது. இந்த மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக ஐகோர்ட்டு பல்வேறு கேள்விகளை கமல்ஹாசன் தரப்புக்கு எழுப்பியது. அதாவது, நீங்கள் (கமல்ஹாசன்) என்ன வரலாற்று ஆய்வாளரா? தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள். நீங்கள் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிந்து இருக்கும். நீங்களோ அல்லது வேறு யாராக இருந்தாலும் மக்களின் உண்ர்வுகளை புண்படுத்த கூடாது . கன்னடம் தமிழில் இருந்து வந்ததற்கான ஆதாரம் உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கர்நாடக ஐகோர்ட்டு எழுப்பியுள்ளது.
இந்நிலையில் கர்நாடகா சினிமா வர்த்தக சேம்பருக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், எனது வார்த்தைகள் அவர்கள் விரும்பிய உணர்வில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், கர்நாடகா, அதன் மக்கள் மற்றும் அவர்களின் மொழி மீதான எனது நீடித்த பாசம் அதன் உண்மையான வெளிச்சத்தில் அங்கீகரிக்கப்படும் என்றும் நான் மனதார நம்புகிறேன். இந்த தவறான புரிதல் தற்காலிகமானது என்றும், நமது பரஸ்பர அன்பையும் மரியாதையையும் மீண்டும் வலியுறுத்த ஒரு வாய்ப்பு என்றும் நான் மனதார நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு கேட்க வேண்டும். தவறாக புரிந்து கொண்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்பது? என்று கமல் தரப்பில் வாதிடப்பட்டது.
கன்னட மொழி குறித்து பேசிய விவகாரத்தில் கமல் மன்னிப்பு கேட்க அவரது ஈகோ தடுக்கிறதா? என்று கர்நாடக உயர்நீதிமன்றம் வினவியுள்ளது. மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என நீதிமன்றம் கூறவில்லை, திரைப்பட சம்மேளன அமைப்பு கேட்கிறது என்பதாக கர்நாடக நீதிமன்றம் கூறுகிறது. இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியில் பாதுகாப்பு கொடுத்து ஏன் தக் லைஃப் படத்தை வெளியிட வேண்டும்.
மேலும் கர்நாடகாவில் தக் லைஃப் பட வெளியீட்டை தள்ளி வைக்கிறோம் என்று நீதிபதி நாகபிரசன்னா உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கானது வருகின்ற பத்தாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.