காஞ்சிபுரம்: தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பான ஆடி மாதம் தொடங்கியுள்ள நிலையில், முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் பக்தர்களின் படையல் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, அம்மனுக்கு உகந்த ‘கூழ் வார்த்தல்’ படையலுக்காக மீன் மற்றும் இறைச்சி வகைகளை வாங்குவதில் பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் மற்றும் தர்கா பகுதி இறைச்சிக் கடைகளில் காலை முதலே பெரும் கூட்டம் குவிந்தது. வீட்டுக்கு தேவையான படையல் பொருட்களை வாங்கிச் செல்ல ஏராளமான அசைவப் பிரியர்கள் வரிசையில் நின்று காத்திருந்த காட்சி காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மீன் வியாபாரிகள் தரப்பில் வஞ்சிரம், வவ்வால், கொடுவா, இறால், நெத்திலி, சங்கரா, மத்தி, நண்டு உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் 100 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இறைச்சிக் கடைகளிலும் ஆடு, கோழி, முயல், காடை உள்ளிட்ட பல்வேறு இறைச்சி வகைகள் நல்ல தரத்துடன் கிடைத்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். ஆடி மாதத்தில் அம்மனுக்கு சிறப்பு படையல்கள் வைத்து கூழ் வார்த்தல் செய்வது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுவதால், பக்தர்கள் இந்த நாளை முன்னிட்டு சந்தைகளில் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

இந்த நாளில் எதிர்பார்த்ததை விட அதிக விற்பனை நடைபெற்றதால் மீன் மற்றும் இறைச்சி வியாபாரிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர். “ஆடி முதல் ஞாயிறு என்பதால் கூட்டம் அதிகம். வழக்கத்தை விட இரு மடங்கு விற்பனை நடக்கிறது” என்று சில வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்களும் குடும்பத்துடன் வந்து தங்களது படையல் தேவைகளை நிறைவேற்றியதால், சந்தைப் பகுதிகள் முழுவதும் பண்டிகை கால உற்சாகம் நிலவியது. ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோயில்களில் இத்தகைய சிறப்பு நிகழ்ச்சிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version