தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவருமான வெங்கடநாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இது தொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில் இரண்டு கேள்விகள் எழுவதாகத் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?
- மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா?
என கனிமொழி எம்பி வினா எழுப்பியுள்ளார்.
