தமிழகம் மற்றும் கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகார்கள் ஓய்வதற்குள், தற்போது கேரள எல்லையான ஆரியங்காவு சோதனைச் சாவடியிலும் முறைகேடுகள் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வழியாக அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், அரிசி, பழங்கள் மற்றும் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த வாகனங்கள் தமிழகத்தின் புளியரை மற்றும் கேரளாவின் ஆரியங்காவு என இரு சோதனைச் சாவடிகளையும் கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ளும் சில காவலர்கள், வாகன ஓட்டிகளிடம் வெளிப்படையாக லஞ்சம் வசூலிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். புளியரை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவ்வப்போது சோதனைகள் நடத்தினாலும், முறைகேடுகள் குறையவில்லை. இந்த நிலையில், கேரள மாநில எல்லைக்குள் நுழையும் தமிழக வாகனங்களை மறித்து, வாகனம் ஒன்றுக்கு 100 ரூபாய் லஞ்சம் பெறும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களைக் குறிவைத்து நடக்கும் இந்த லஞ்ச வசூல், ஓட்டுநர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, எல்லையில் நடக்கும் லஞ்ச வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version