தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைகளை பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்டவை ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில் அதன் ஒரு பகுதியாக திமுக செய்து வரும் “உடன்பிறப்பே வா” நிகழ்வும், அதன் மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்து வந்த உள்கட்சி பூசல் நிகழ்வுகள் ஒவ்வொன்றாக வெளிவருவதும், அப்பிரச்சனைகளுக்கு தலைமை சமாதானம் பேசி முடித்து வைக்கும் வேலைகளும் தகவல்களாக வெளிவருகின்றன.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி வழியில், முதல்வரும் திமுக தலைமையுமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தொகுதி வாரியாக பகுதி-நகர-ஒன்றிய-பேரூர் கழகச் செயலாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து வருகிறார். நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வான “உடன்பிறப்பே வா” நிகழ்வில் ஒவ்வொரு பகுதியிலும் முன்வைக்கப்படும் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் பெரும்பாலானவற்றுக்கு உடனடியாக அமைச்சர்களிடம் பேசி அதை செய்து கொடுக்குமாறு உடனடியாக உத்தரவு பிறப்பித்து வருகிறார் முதல்வர். அந்த வகையில் ஒரு எடுத்துக்காட்டாக, “ராஜபாளையத்தில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை திறக்கப்படவில்லை” என்ற கோரிக்கையைத் தீர்க்க மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை உடனடியாக அறிவாலயத்திற்கு அழைத்து ஆலோசனை செய்தார் முதலமைச்சர்.

அதுபோக இந்நிகழ்வில் அணையாத பல ‘உள்கட்சி விரோத தீப்பிழம்புகள்’ தற்காலிகமாக அணைக்கப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட உட்கட்சிப்பூசல்களில் ஈடுபடும் இரு தரப்பு உடன் பிறப்புகளையும் அழைத்து டோஸ் விட்டு எச்சரித்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், மண்டல பொறுப்பாளர்கள் அனைத்து பிரச்சனைகளையும் கண்காணித்து அவ்வப்போது தலைமைக்கு ரிப்போர்ட் தர வேண்டும் என்றும் கடுமையான உத்தரவு போட்டிருக்கிறார் முதல்வர் என வெளியாகின்றன அறிவாலய தரப்பு தகவல்கள்.

“திமுக நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு” என நினைத்தால், அப்படி இல்லை; தேர்தலில் தோல்விக்கே வழிவகுக்கும் வகையில் சில பிரச்சனைகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிக்குள்ளேயே நடந்து கொண்டு இருக்கிறது என்கின்றன சில தகவல்கள். அனைத்து மாவட்டங்களில் வெடிக்கும் பல உள்கட்சி பிரச்சனைகளில் சில பிரச்சனைகளை இங்கு காணலாம்.

தலைநகரில் நடக்கும் தடாலடி

‘உடன்பிறப்பே வா’ நிகழ்விலேயே சென்னையிலுள்ள ‘தனி’ தொகுதி எம்.எல்.ஏவின் செயல்பாடுகளை மையப்படுத்தி பேசுகையில் அந்த எம்.எல்.ஏவுக்கு ஆதரவாக பேசிய ‘மன்னர்’ எம்.பிக்கும், சென்னையின் முக்கிய கையாக பார்க்கப்படும் ‘ஆன்மீக’ அமைச்சருக்கும் இடையே முற்றிய வார்த்தை போர் முதல்வர் முன்னிலையிலேயே பெரிதாக முற்றியிருக்கிறது. இருவரையுமே முதல்வர் சமாதானப்படுத்த முயன்றும் அம்முயற்சி கைகொடுக்காத நிலையில் பொறுமையிழந்த முதல்வர் அங்கிருந்து சென்றே விட்டாராம். இப்படியாக கட்சியின் தலைமை முன்னிலையிலேயே சண்டை போடும் அளவில் இருக்கிறது சென்னை மாவட்டத்தின் நிலை.

வேலூரில் நீளும் வாய்க்கால் தகராறு

சமீபத்தில் நடந்த சம்பவமாக, வேலூர் மாவட்ட திமுக செயலாளராக தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த ஏ.பி.நந்தகுமாரின் அதிகாரத்தை பாதியாக்கி, அதை அமைச்சர் துரைமுருகனின் மகன் எம்.பி.கதிர் ஆனந்துக்கு கொடுத்திருக்கிறது திமுக தலைமை. அதாவது, வேலூர் மத்திய மாவட்ட திமுக இப்போது வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டு அதில் வடக்கு மாவட்டத்திற்கு கதிர் ஆனந்தும், தெற்கு மாவட்டத்திற்கு நந்தகுமாரும் செயலாளர் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் பின்னணியில், மாவட்ட கட்சி நிகழ்வுக்கு நந்தகுமார் பணம் தரவில்லை என்ற புகாரே காரணமாகி இருக்கிறது. உதயநிதி பங்கேற்கும் கட்சி நிகழ்விற்கு பணம் கேட்ட போது, “மாவட்ட வரும்படிகளை எம்.பி தானே பார்க்கிறார், செலவு மட்டும் நான் செய்யணுமா? அவரிடமும் கேளுங்கள்” என பொருமியுள்ளார். இவற்றை அப்படியே பிசகாமல் பொது செயலாளர் காதுகளுக்கு கொண்டு சென்ற கதிர் & கோ, அவர் மூலமாக தலைமைக்கு சொல்லவே நடந்த மாற்றம் தான் மாவட்ட பிரிப்பும் புதிய பொறுப்பும். ஏற்கனவே கதிர் ஆனந்திற்கு நந்தகுமாருக்கும் வாய்க்கா தகராறு; போதாக்குறைக்கு இந்த மாவட்ட பிரிப்பு வேறு.

மதுரையில் மல்லுக்கட்டும் மாண்புமிகு

அடுத்து ஒரு முக்கிய மாவட்டமான மதுரையை பொறுத்தவரை, அங்கிருக்கும் இரு ‘மாண்புமிகு’க்களில் ஒருவர் மதுரையில் தேர்தல் பணிகள் முதற்கொண்டு அனைத்தும் தான் சொல்வது போலத்தான் நடக்க வேண்டும்; “மதுரைக்கு இனி நான் தான்” என்கிறாராம். அவர் தலைமையிடம் படு நெருக்கமானதே இத்தகைய அடாவடிகளுக்கு காரணம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர். சமீபத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மதுரையில் அவரது தொகுதிக்குட்பட்ட மஞ்சமேடு பகுதியில், சாக்கடை சரியாக பராமரிக்கப்படாத விவகாரத்தில் மக்களுக்கான எந்தவொரு அடிப்படை பணிகளும் பெரும்பாலும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை; என்ன தான் செய்கிறீர்கள் என மதுரை மாநகராட்சி அதிகாரிகளுக்கு டோஸ் விட்டது ஒருவகையில் இம்மாவட்டத்தில் நடக்கும் பாரபட்ச செயல்பாடுகளுக்கு ஒரு சிறந்த உதாரணம்.

கொங்கு மண்டலத்தில் கொக்கரிக்கும் புள்ளி

கொங்கு மண்டலத்தை பார்த்தோமேயானால், மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி 20 தொகுதிகளை குறிவைத்து களமாடுகிறார். கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வேட்பாளர் தேர்வு முதற்கொண்டு அனைத்து செயல்பாடுகளும் அவர் விருப்படி தான் நடக்க வேண்டும் எனும் நிலை உருவாகியிருப்பதால அப்பகுதியில் உள்ள அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட சீனியர் புள்ளிகள் உள்ளுக்குள் ‘கடுகடு’த்து தான் இருக்கிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல. திமுகவுக்குள் அவர் புதியவராக நுழைந்ததிலிருந்தே அவருக்கு முதன்மையானவர் கொடுக்கும் முக்கியத்துவம் பல காலமாக திமுகவில் இருக்கும் சீனியர்களை டென்சன் ஆக்கித்தான் இருக்கிறது. ஒருமுறை கரூரில் எம்.பி. திருச்சி சிவா மேடையில் பேசிக்கொண்டிருக்க தாமதமாக வந்த செந்தில்பாலாஜிக்காக அனைவரும் எழுந்து நிற்க, “அவர் பாட்டுக்கு வர்றாரு.. நீங்க ஏன் அங்க திரும்புறீங்க.. நான் இங்க அடி வயித்துல இருந்து பேசிக்கொண்டு இருக்கிறேன்” என படக்கென்று பேசியிருப்பார். இதெல்லாம் நினைவுகூறத்தக்கது.

மேலே குறிப்பிட்ட நிகழ்வுகள் எல்லாம் மிக மிக சொற்பமான சில எடுத்துக்காட்டுகள் தான். வெளியில் தெரியாமல் உள்ளுக்குள் புகைந்து கொண்டு இருக்கும் பகைமை தீ எத்தனையோ உண்டு. இவை அனைத்து கட்சியிலும் உண்டு தான். ஆனால், ஆட்சியில் இருப்பதாலும் அடுத்த முறையும் ஆட்சியை பிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பாலும் திமுக இதில் தனிக்கவனம் பெறுகிறது.

மேற்குறிப்பிட்ட விவகாரங்கள் உள்பட அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் பணமும், அதிகாரமும், செல்வாக்கும், ‘யார் பெரியவர்?’ என்ற ஈகோவும் தான் பிரதான காரணங்களாக இருக்கின்றன. இவற்றின் அடிப்படையில் முளைவிட்டு, வளர்ந்து, சில இடங்களில் விருட்சமாக வளர்ந்திருக்கும் விரோதங்களுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது திமுக தலைமை? இருக்கிற 38 மாவட்டங்களில் 3008 உள்கட்சி பிரச்சனைகள் திமுகவில் தலைதூக்கியிருக்கும் நிலையில் அவற்றையெல்லாம் சரி செய்துவிடுமா இந்த “உடன்பிறப்பே வா” நிகழ்வு? பார்க்கலாம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version