சென்னை தேனாம்பேட்டையில் உள்ள உள்ள தேசிய நல்வாழ்வு குழும அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் சுமார் 7.70 கோடி மதிப்பீட்டில் சமூக பொறுப்பு நிதியின் கீழ் 11 அரசு மருத்துவமனையில் 10 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சை பிரிவு மையங்களை மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தொழில் நிறுவன பொறுப்பு நிதியின் கீழ் HDFC வங்கி மூலம் கடலூர், தென்காசி, காஞ்சிபுரம், பெரம்பலூர், திருப்பத்தூர், ஈரோடு, மயிலாடுதுறை,ஓசூர், கோவில்பட்டி, பொள்ளாச்சி, கும்பகோணம் ஆகிய 11 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் நவீன உபகரணங்களுடன் மேம்படுத்தப்பட்ட 10 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு மையங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.
பின்ன செய்தியாளர்களை அமைச்சர் அருண்ராஜ் சந்தித்து கூறியதாவது;-
தமிழகத்தில் 11 அரசு தலைமை மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் தலா 10 படுக்கைகள் கொண்ட நவீன அவசர தீவிர சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடலூர், தென்காசி, திருப்பத்தூர், ஈரோடு, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் HDFC வங்கியின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) நிதியின் கீழ் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் 70 லட்சம் மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன
மேலும் பல கார்ப்பரேட் மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களின் CSR நிதியை சுகாதாரத்துறைக்கு பெருமளவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
நாமக்கல் பகுதியில் வெளிச்சத்திற்கு வந்த சிறுநீரகத் திருட்டு விவகாரத்தில் சட்டப்படி வெளிப்படையான விசாரணை நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, 3 மருத்துவமனைகள் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நாமக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எந்தவித அரசியல் தலையீடும் இன்றி, நேர்மையான முறையில் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரும்.
டெங்கு காய்ச்சல் பரவல் கடந்த ஆண்டுகளில் ஜூலை 21 ஆம் தேதி வரை 2024 இல் 23,000 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்,
2025 ஆம் ஆண்டு 11,000 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்,
2026 இந்தாண்டு 9,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கள மருத்துவர்களின் கருத்துப்படி டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறப்படுவதால், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கொசு ஒழிப்புப் பணியாளர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
பொதுமக்கள் தங்கள் வீடுகளின் அருகில் நீர் தேங்காமல் பார்த்துக்கொண்டு, கொசு உற்பத்தியைத் தடுக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசு மற்றும் தமிழக மக்களின் மாறாத நிலைப்பாடாகும். கிராமப்புற மாணவர்களுக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரான நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்படும்.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கிலும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கல்வி மற்றும் மருத்துவத்தை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவது மட்டுமே இதற்கான நிரந்தர தீர்வு. சிறப்புப் பொதுப் பட்டியலை உருவாக்கி மாநில தேவைகளுக்கேற்ப முடிவெடுக்க மத்திய அரசு அதிகாரம் வழங்க வேண்டும்.
அகில இந்திய அளவில் ஒரே தேர்வாக நடத்துவதாலேயே வினாத்தாள் கசிவு போன்ற தவறுகள் தொடர்கின்றன.
ராணுவம், நிதி, வெளியுறவுத் துறை போல மருத்துவ சேர்க்கை மற்றும் தேர்வை மாநில அரசுகளிடமே மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும்.
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும். மத்திய எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது.
மாநில உரிமை மற்றும் மாணவர் நலன் சார்ந்த விஷயங்களில் தமிழக அரசும் ஆளும் கட்சியும் எந்தவித சமரசமும் செய்யாது; முதலமைச்சர் எப்போதும் மாநில நலனில் உறுதியாக இருக்கிறார்.
குழந்தைகள் மற்றும் பெண்களை அதிகம் பாதிக்கும் நாய் கடி பிரச்சனைக்குத் தீர்வு காண, தலைமைச் செயலாளர் தலைமையில் பல்வேறு துறைகளுடன் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகாரில் அமைக்கப்பட்ட முதல் குழுவின் அறிக்கை முழுமையாக இல்லாததால், ஆதாரங்களைச் சேகரிக்க இரண்டாவது விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்ததும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சித்த மருத்துவக் கல்லூரிகளை அதிகரிப்பது, பணி வாய்ப்பு மற்றும் பணி நிரந்தரம் தொடர்பான கோரிக்கைகள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் உட்பட அரசு மருத்துவமனைகளில் நரம்பியல், இதயம், சிறுநீரகம் போன்ற சிறப்பு மருத்துவர்களின் தேவையை நிறைவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து தேசிய நல்வாழ்வு குழும அலுவலகத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் குறித்து மாநில அளவிலான காசநோய் இயக்குனர்களுடனான ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் அருண்ராஜ் கலந்துகொண்டார். அப்போது காச நோயை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் காசநோய் ஒழிப்புத் திட்டத்தை முழுமையாக பின்பற்ற அறிவுறுத்தியவர், தமிழ்நாட்டில் காசநோய் குறைப்புக்கு எந்த எந்த மாவட்டங்களுக்கு கருவிகள் தேவை என்பதை கொடுத்தால் வசதிகள் ஏற்படுத்திதரப்படும் என தெரிவித்தார்.
