கோவில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள புளியங்குளம் கிராமத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள அடர்த்தியான காட்டுப் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான ஒரு கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு அருகாமையில் உள்ள ஒரு கட்டிடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு அந்தக் கட்டிடத்தில் பட்டாசு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

சத்தம் கேட்டு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வெடிப்பின் தாக்குதலில் அந்தக் கட்டிடம் முழுமையாக இடிந்து நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள், விருதுநகர் மாவட்டம் புல்லகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் மனைவி மாலதி (25) மற்றும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆத்தியப்பன் மகன் ஐயப்பன் (30) ஆகியோர் ஆவர்.

மேலும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் சூரியபிரகாஷ் (25) என்பவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் பணிக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இடிபாடுகளை அகற்றி உயிரிழந்த இருவரின் சடலங்களை மீட்டனர். அவை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

காயமடைந்த சூரியபிரகாஷுக்கு முதலில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன், அவரது மனைவி மாரீஸ்வரி (30) மற்றும் கட்டிட உரிமையாளர் குருநாதன் (65) ஆகிய மூவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் மாரீஸ்வரி மற்றும் குருநாதன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சரவணன் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்பகுதியில் சட்டவிரோத பட்டாசு உற்பத்தி நடைபெற்று வந்ததை அதிகாரிகள் முன்பே அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காதது குறித்து உள்ளூர் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version