கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வினாடிக்கு 1000 கன அடிக்கும் மேல் நீர் திறக்கப்படுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஆற்றில் ரசாயன நுரைகள் பெருக்கெடுத்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

பலத்த காற்றுக்கு இந்த ரசாயன நுரைகள் விவசாய தோட்டங்களுக்குள்ளும், சாலையில் செல்லும் பொதுமக்கள் மீதும் விழுவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்து சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுநீர் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதால் இந்த நுரை ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஓசூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணாரெட்டி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “கர்நாடகா பெங்களூருவில் இருந்து ஆண்டு முழுவதும் ரசாயன கழிவுநீர் தான் தென்பெண்ணை ஆற்றில் வருகிறது. இந்த நீரை பாசனத்திற்கு பயன்படுத்தினால் கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், கீரை விளைச்சல் வராது. அணையில் மீன்கள் உயிரிழந்துள்ளன. கால்நடைகளும் இந்த நீரை குடிக்க முடியாத நிலை உள்ளது.

தென்பெண்ணை ஆற்றை பாதுகாக்க தமிழக, கர்நாடகா அரசுகள் பேச்சுவார்தை நடத்தி தீர்வு காண வேண்டும். சூளகிரியை தாண்டிய பின் தண்ணீர் சுத்தமாகிறது. ஆனால் ஓசூர் சட்டசபை தொகுதி கடுமையாக பாதிக்கப்படுகிறது” என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version