ஜோலார்பேட்டை அருகே இன்ஸ்டாகிராம் பார்த்ததை பெற்றோர்கள் கண்டித்ததால், பிளஸ் டூ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மகள் சுதா (17) என்பவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று மாலை சுதா வீட்டில் செல்போனில் இன்ஸ்டாகிராம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது பெற்றோர்கள் படிக்காமல் செல்போன் எதற்கு பார்க்கிறாய் என கேட்டு கண்டித்ததாக தெரிகிறது.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுதா வீட்டின் அறைக்கு சென்று கதவை சாத்தியுள்ளார். பின்னர் இதை அறிந்த பெற்றோர்கள் சுதாவை கதவை திறக்க கோரி சத்தம் போட்டு உள்ளனர். ஆனால் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்த சுதாவை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலை உயிரிழந்தார்.
பின்னர் இது குறித்து மாணவியின் தந்தை சுபாஷ் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
