திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலான தொழிலாளர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதனால் அருகிலுள்ள புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடனும், தனியாகவும் வாடகை வீடுகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை ஒருவர் திடீரென மாயமானார். குழந்தையை தேடிய பெற்றோர் எங்கும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அருகே உள்ள முட்புதரில் இயற்கை உபாதைக்குச் சென்ற பெண்கள் சிலர் குழந்தை ரத்தக்காயங்களுடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை முதலில் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

விசாரணையில், குழந்தையின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது பிபின் மஞ்சி என்பவர் பிஸ்கெட் வாங்கித் தருவதாகக் கூறி குழந்தையை அழைத்துச் சென்றதாக தெரியவந்தது. முட்புதரில் வைத்து அவர் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், ஒரே அறையில் தங்கியிருந்த நான்கு வடமாநில இளைஞர்கள் சேர்ந்தே இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டினர். அனைவரையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனிடையே சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. போக்சோ சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிபின் மஞ்சியை புழல் சிறையில் அடைத்து, வரும் 29ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டார். மேலும் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.8 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர். “குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தை இருவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். வழக்கு தொடர்பான கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. சரிபார்க்கப்படாத மற்றும் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்” என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்பேட்டைப் பகுதிகளில் வாழும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version