தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் உள்ள நிலங்கள் மற்றும் சொத்துகளின் வழிகாட்டி மதிப்பை 30 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர்த்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, தற்போதைய சந்தை விலைக்கும் அரசு பதிவு மதிப்புக்கும் இடையே உள்ள பெரும் இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் அமைந்துள்ளது.

வருவாய்க் கிராமங்கள், நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் முக்கிய சாலை ஓரங்களில் சமீபகாலத்தில் நடைபெற்ற சொத்துப் பதிவுகள் மற்றும் உண்மையான சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து புதிய மதிப்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டப் பதிவாளர் தலைமையில் மண்டல அளவிலான குழுக்கள் கிராம வாரியாக நில விவரங்களைச் சரிபார்த்து வருகின்றன.

மனைப் பிரிவுகள், விவசாய நிலங்கள், வணிகக் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சந்தை விலையைக் கருத்தில் கொண்டு இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. உள்கட்டமைப்பு வளர்ச்சி பெற்ற பகுதிகள், புதிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், மெட்ரோ ரயில் பாதைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களுக்கு அருகில் உள்ள கிராமங்களில் அதிகபட்சமாக 60 சதவீதம் வரை மதிப்பு உயர வாய்ப்புள்ளது. இதனால் முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் அதிகரித்து அரசின் வருவாய் கணிசமாக உயரும்.

அதேநேரம், சொத்து வாங்கும்போது நிலவும் முறையற்ற பணப் பரிவர்த்தனைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகளில் நிலத்தை அடமானம் வைத்துப் பெறப்படும் கடன் தொகை வரம்பும் அதிகரிக்கும். இந்த உயர்வு சொத்து உரிமையாளர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மாநிலம் முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்படும் இந்த நடவடிக்கை, நிலச் சந்தையில் ஒழுங்கை மேம்படுத்தும் என கருதப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version