இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டரான ரிஷப் பந்த், தனது சொந்த மாநிலத்தில் நிலம் வாங்குவதற்காக உத்தரகண்டு முதலமைச்சர் புஷ்கர் சிங் தமியிடம் உதவி கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நள்ளிரவில் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், டெல்லியிலிருந்து தனது வசிப்பிடத்தை உத்தரகண்டுக்கு மாற்றி, அங்குள்ள ‘பஹாடி’ (மலைவாழ்) மக்களுடன் இருக்கவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் விரும்புவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக நிலம் வாங்குவதற்காக தான் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும், அதற்கான செயல்முறை மிகவும் கடினமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அந்த நிலத்தை இலவச பரிசாக பெற விரும்பவில்லை என்றும், அரசாங்கத்தின் முறையான விலையைக் கொடுத்து வாங்க விரும்புவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பந்த் பங்கேற்றிருந்த வேளையில், இந்தத் திடீர் பதிவால் ஆரம்பத்தில் அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.
ரிஷப் பந்த்தின் கோரிக்கைக்குப் பதிலளித்துள்ள முதல்வர் புஷ்கர் சிங் தமி, அவரை “உத்தராகண்டின் பெருமை” என்று வர்ணித்துள்ளார். மேலும், “நம் மாநிலத்திற்கு வர விரும்பும் எவரும் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள். பந்த் நமது மாநிலத்தைச் சேர்ந்தவர், நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். அரசு அதிகாரிகள் அவரிடம் பேசி, விதிகளுக்கு உட்பட்டு அனைத்து உதவிகளையும் செய்வார்கள்” என்று உறுதியளித்துள்ளார்.
